புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள், பெங்களூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம் ஆகியவை நாடு முழுவதும் பலத்த விமர்சனங்களை எழுப்பியது. அந்த வரிசையில் டெல்லி இளைஞர் ஒருவர் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து முத்தமிட்டு அவற்றை வீடியோவாக வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த இளைஞர் சுமித் வெர்மா மற்றும் அவரது உதவியாளர் சத்யஜீத் இருவரையும் குர்கானில் வைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களை மானபங்கம் செய்தல், ஆபாசமானவற்றை விநியோகம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2015-ம் ஆண்டிலிருந்து ‘தி கிரேஸி சப்மிட்’ என்ற பெயரில் யூ-டியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்த சுமித் வெர்மாவை, சுமார் ஒன்றரை லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். முத்த வீடியோவுக்கு வெளியான எதிர்ப்பைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சுமித் வெர்மா மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.