மத நல்லிணக்கத்தின் புதிய அடையாளம், காஷ்மீரில் முஸ்லீம்கள் கொண்டாடிய சிவராத்திரி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிக அளவில் முஸ்லீம் மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்த பின்னர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பது அவர்களின் வழக்கம். ஆனால், நேற்று மகா சிவராத்திரி பண்டிகை என்பதால் இந்துக்கள் கடைகளுக்குச் சென்று பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்குவார்கள்.

இதனால் முழு அடைப்புக்கு முஸ்லீம்கள் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், பந்திப்போரா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையில் மிகப் பழமையான சிவன் கோவிலுக்கு, நேற்று தொழுகை முடிந்த பின்னர், சென்ற முஸ்லீம் இளைஞர்கள் பலர் அந்தக் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தி, சிவலிங்கத்தின் மீது நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அங்கு பிராத்தனைக்காக வந்த இந்து மக்களுடன் சேர்ந்து வழிபாட்டில் பங்கேற்ற அவர்கள், பூஜை முடிந்த பின்னர் இனிப்புகள் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளனர். கோவிலுக்கு வெளியே கூட்டமாக நின்ற முஸ்லீம் இளைஞர்கள், காஷ்மீரில் இருந்து வெளியேறிய இந்து பண்டிதர்கள் மீண்டும் காஷ்மீர் திரும்ப வேண்டும் என பதாகைகளை பிடித்து இருந்தனர்.

அப்போது பேசிய முஸ்லீம் இளைஞர்கள் சிலர், “இந்து மக்களுடன் இணக்கமாகவே எங்கள் உறவு உள்ளது. அதற்கான வெளிப்பாடுதான் இந்த சிவராத்திரி பண்டிகை. காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிதர்கள் மீண்டும் இங்கு திரும்ப வேண்டும். நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்” எனக் கூறினர். அரசியல் மற்றும் மதவாத இயக்கங்கள் இந்து – முஸ்லீம்களை பிரித்தாலும், அவர்கள் ஒரு போதும் பிரியமாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை