ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (21.03.2023) நடந்தது.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது, “இன்று தம்பி கண்ணன் நல்ல தயாரிப்பாளர், இயக்குநர். ஒருகாலத்தில் ராமநாராயணன் போல தொடர்ந்து படங்களை எடுத்துக்கொண்டே இருப்பார் இப்படி படங்கள் எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். அப்படியானால் நான் படமே எடுக்க மாட்டேன், இயக்குவேன் என்று சொன்னார். நல்ல முடிவு. படம் தயாரிப்பது போன்ற ஒரு தண்டனை வேறு எதுவும் இல்லை. பாவம் செய்தவன் தான் படம் எடுக்க வருவான் என்பது புது மொழி. தயாரிப்பாளர்களை வாழ வைக்க சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாதது. இன்று எந்த படம் ஓடும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயம். ஆனால் மக்கள் நல்ல படத்தை பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. ‘லவ் டுடே’ சமீபத்திய உதாரணம். இன்னும் மூன்று வருடத்திற்கு கண்ணன் படங்கள் திட்டமிட்டு கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான். அதனால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் தலைப்பைப் போல படம் வெற்றியடைந்து பணம் கொட்ட வாழ்த்துகள்”.
இசையமைப்பாளர் ராஜ் பிரதாப் பேசியதாவது, ” இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆர். கண்ணன் சாருக்கு என்னுடைய நன்றி. அவருடைய ‘பிஸ்கோத்து’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் என்னை நம்பி இந்த படத்திற்கு அழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நிறைய புது முயற்சிகள் செய்வதற்கான சுதந்திரம் இயக்குந்ர் எனக்கு கொடுத்தார். ‘பிஸ்கோத்து’ படம் பண்ணும்போது, ‘இந்த படம் மட்டும் நீ செய்துவிட்டால் அடுத்த பத்து வருடத்திற்கு எந்த படம் கொடுத்தாலும் செய்வாய்’ என்று ஒரு வார்த்தை சொன்னார். ‘காசேதான் கடவுளா’ ஒரு காமெடிப்படம் எனும்போது ஒரே மாதிரியான இசை கொடுக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படுத்த வேண்டும். 1972-ல் வந்த படத்தின் ரீகிரியேஷன் என்பதால் விண்டேஜ் ஸ்டைலும் இசையில் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். லைவ் இசையும் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். எம்எஸ்வி சாரின் இசையை கெடுக்காத வண்ணம் நான் இதில் வேலை செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். சிவா சாரும் படத்தின் இசையில் ஆர்வமாக எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரை சந்தித்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.
எடிட்டர் சூர்யா பேசியதாவது, “இது எனக்கு முதல் படம். இயக்குநர் கண்ணன் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். எளிதாக பழகக்கூடியவர். ‘காசேதான் கடவுளடா’ போன்ற கல்ட் கிளாஸிக் படத்தை எடுக்கும்போது ஒரு தெளிவு தேவை. அது இயக்குநர் கண்ணனிடம் இருக்கிறது. படத்தின் எல்லா ஃப்ரேம்களிலும் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் தான் இருப்பார்கள். படம் நகைச்சுவையாக நன்றாக வந்திருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்”.
படத்தை வெளியிடும் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது, “ஒரு படம் வெளியாவதற்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி வெளியிடுவதற்கு இயக்குநர் கண்ணன் என்னிடம் இந்த படத்தைக் கொடுத்தார். நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுக்க வெளியிட்டு கொடுத்தேன். அது வெற்றி படமாக அமைந்தது. ஆர் ஜே பாலாஜியின் ‘எல்கேஜி’ திரைப்படத்தைப் பார்த்து அது வெற்றியடையும் என்று வாழ்த்தி அந்த படத்தை விட இரண்டு மடங்கு பிசினஸ் செய்து கொடுத்தேன். சினிமாவை நேசித்து இயங்கக்கூடிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு சினிமா நல்லதையே திருப்பி கொடுக்கும். அதனால்தான் கண்ணன் சாரிடம் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று வாங்கினேன். ‘வணக்கம் சென்னை’ படத்தில் எப்படி பிரியா ஆனந்துக்கும் மிர்ச்சி சிவா சாருக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்ததோ அது போலவே இந்த படம் முழுக்க ஒரு ஃபீல் குட்டாக இருக்கும். படம் வெற்றியடைய வாழ்த்துகள்”.
தயாரிப்பாளர் கார்த்திகேயன், “1972-ல் ‘காசேதான் கடவுளடா’ படத்தை ஏவிஎம் பெரிய ஜாம்பவான்களை வைத்து தயாரித்திருந்தது. இப்போது இருக்கக்கூடிய ஜாம்பவான்களை வைத்து கண்ணன் இயக்கி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.
ஜீ5 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெயக்கிருஷ்ணன் பேசியதாவது, ” நடிகர் சிவா என்னுடைய நெருங்கிய நண்பர். மிகவும் பாசிட்டிவான நபர். கண்ணன் சார் இயக்கிய ‘ஜெயங்கொண்டான்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திற்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அதன் பிறகு தான் படம் பார்த்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன். சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் பல காட்சிகள் உங்களை சிந்திக்கவும் வைக்கும். பழைய படத்தை விட இந்த படம் இன்னும் பல மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.
நடிகர் சிவா பேசியதாவது, ” கண்ணன் சார் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். லாக்டவுன் சமயத்தில் என்னை அழைத்து இந்த முறை படம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னார். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும். அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்தப் படத்தை விட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு சார், கருணாகரன் என இந்த படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தயாரிப்பாளராக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இயக்குநராக கண்ணன் அவரது பணியை இனிமேல் சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க”.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசியதாவது, “போன மாதம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியானது. இந்த மாதம் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. சினிமா இன்று இருக்கக்கூடிய சூழலில் மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எனக்கு பலருடைய ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி! குறிப்பாக மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி! மிர்ச்சி சிவா இந்த படத்தின் ஹீரோ. அவர் இல்லாமல் இந்த படம் இல்லை. அவரால்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. நீண்ட கால நண்பர். இப்போதுதான் இருவரும் படம் இணைந்து வேலை செய்ய சூழ்நிலை அமைந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘பம்மல் கே சம்மந்தம்’ படம் போல, இந்தப் படம் ஜாலியான ஒன்றாக இருக்கும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன்நின்ற அனைவருக்கும் நன்றி”.