பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடா? – எம்.எல்.ஏ., கருணாஸ் கண்டனம்

இடஒதுக்கீடு என்பது வறுமையில் உள்ளோர் அனைவரும் பெற்றுக்கொள்ளும் இலவசத் திட்டமல்ல! மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்படும் சமூகநீதி விடுதலைக்கான திறவுகோல்!
 
இத்தகைய சமூக நீதிக் கோட்பாட்டை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டுமென்று பா.ஜ.க.அரசு செய்யும் சதி! மேலும் இந்த பொருளாதரா ரீதியான இடஒதுக்கீடு என்ற திட்டத்தை கையில் எடுத்திருப்பது வரவேற்க தக்கதல்ல மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
மிகவும் நுட்பமாக தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழை எளியோரை மேம்படுத்துவது என்பதல்ல; மாறாக, சமூக நீதிக் கோட்பாட்டை அழித்தொழிப்பது.
 
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு நடைமுறைப் படுத்திவிட்டால், காலப்போக்கில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சி!
 
வெளிநாடு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்துவதாக கடந்த தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றி இருந்தால் இந்தியாவில் இந்த நிலையேவந்திருக்காது ஏழைகளே இல்லையென்றால் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடும் தேவைப்படாது.
 
சமூக ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஊழல் தான் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் சூழல் ஏற்படும்
 
வருகிற நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு இந்த சதிவேலையை நுட்பமாக செய்ய நினைக்கிறது! பா.ஜ.க. அரசு! சமூக நீதியை இவர்கள் கொலை செய்ய துணிந்துவிட்டார்கள்! நம் அதை முறியடிக்க போராடவேண்டும்!
 
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.