இறந்த பின்னும் போராடி வெற்றி பெற்றார் கருணாநிதி, மெரினாவில் இடம்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரி தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ண சாமாதிக்கு அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க கோரி தி.மு.க சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், இடம் அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பாக தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி குலுவாலி ரமேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது, தி.மு.க தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் எழுத்து பூர்வமாக பதில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றம் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை காலை 8 மணிக்கு ஒத்திவைத்தனர். 

இன்று காலை 8 மணியளவில் தமிழக அரசு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய கிண்டியில் இடம் அளிக்கப்படும் என்றே மீண்டும் அரசு தெரிவித்து இருந்தது.

மெரினாவில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக  தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில், கருணாநிதியின் உடலை அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.