பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

கேரள அரசு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை சில நாட்களாக தீவிரப்படுத்தி வருகிறது. பவானி ஆற்றின் நீராதாரத்தை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயன்பெறுகிறது. இதுதவிர, 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்கு பவானி ஆறு முக்கிய காரணமாக இருக்கிறது.  இந்த ஆற்றின் குறுக்கே மஞ்சக்கண்டி, தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை நடத்தி வருகிறது. பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், கூடப்பட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்ட சர்வே பணி முடிந்துள்ளது.  இதனையடுத்து, கேரள எல்லைக்குள் இடுக்கி, அணைவயல், அணைக்கல்லு, காரவாடா உள்பட மேலும் சில இடங்களில்  தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. கேரள அரசின் இந்த முயற்சி தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று பன்னீர் செல்வம் கூறினார்.