விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, “இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.