கலாநிதிமாறனின் சகோதரர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது முறைகேடாக பிஎஸ்என்எல் இணைப்புகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இணைப்பு முறைகேடு மூலம் அரசுக்கு 1.75 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டது. தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உட்பட 7 பேர் மீது இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கானது நடைபெற்று வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ கடந்த 2015-ஆம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக கூறப்பட்ட நிலையில், தயாநிதிமாறன் உட்பட 4 பேர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக சிபிஐ விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை இம்மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.