நாயகன் கே.ஜி. படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறான். நாயகி அதுல்யா ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறாள். இருவரும் ஒருமுறை சந்தித்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள். அடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள்.
இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா? அல்லது நீடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
காதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன. பவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.