மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு நாளை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது. இது தமிழ்நாட்டின் தலையெழுத்தையை மாற்றும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. 1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். இதனிடையே நாளை பிப்ரவரி 14ஆம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு தண்டனை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் இத்தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து ஹோட்டலில் அடைத்து வைத்துள்ளார். தமிழக ஆளுநரோ இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். சசிகலா தலை தப்புமா? அவர் முதல்வர் நாற்காலியில் அமருவாரா என்பது தெரியவரும். இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது. தமிழகத்தின் தலையெழுத்தையும், சசிகலாவின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.