நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அசரீரி

அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர் திரையில் கொண்டு வருவார் என்பது தான். அந்த வகையில், ஜி.கே. ஒரு விதிவிலக்கானவர். அவர் ஏற்கெனவே தனது திறமையை ‘அசரீரி’ என்ற அதே தலைப்பில் உருவான குறும்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மறுபுறம், இது தொழில்நுட்ப அம்சங்களை பற்றியது மட்டுமல்ல, கதையில் உள்ள உணர்ச்சி கூறுகளை பற்றியதும் கூட. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது நிச்சயம்” என்றார்.
 
இயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.
 
நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.
 
இயக்குனர் ஜி.கே. ஏற்கனவே “ராடான் குறும்பட போட்டியில்” அதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். “நாங்கள் இந்த  தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு” என்றார்.
 
அறிவியல் புனைவு திரைப்படங்களுக்கு ”இசை” என்பது மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும். அதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரபாலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.