”உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் வெளியாகும் ‘ஜப்பான்’” ; 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது.

“ஒரு க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது..” என்கிறார் நாயகன் கார்த்தி.

தென்னிந்திய சினிமாவின் மிக பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். “துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த கதாபாத்திரமும் இயக்குநர் ராஜூ முருகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வமும் தான் என்னை இந்த படத்துக்குள் இழுத்து வந்தது. #குக்கூ மற்றும் #ஜோக்கர் என அவருடைய முந்தைய இரண்டு படங்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். மேலும் இந்த சமூகம், இங்குள்ள கலாச்சாரம் குறித்த அவரது புரிதல் ரொம்பவே அழகானது” என்கிறார் கார்த்தி..

குறிப்பாக வாழ்க்கை, ரொமான்ஸ், நட்பு மற்றும் மதுபோதை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக ராஜூ முருகன் எழுதிய ‘வட்டியும் முதலும்’ என்கிற அவரது கட்டுரை தொகுப்பும் மேலும் அதை தழுவி #ஜப்பான் போன்ற ஒரு க்ரைம் கதை உருவானதும் நடிகர் கார்த்தியை திகைக்க வைத்து விட்டது.

“சர்வதேச அளவிலான பார்வையாளர்களை கவரும் விதமான சாத்தியம் இந்த ஜப்பான் படத்துக்கு இருக்கிறது. அதனால் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் வரவேண்டும் என நான் விரும்பினேன். அவருடைய பார்வை இப்படத்தை மாற்றும் என நாங்கள் நம்பியதை போலவே நாங்கள் இப்போது சாதித்திருக்கிறோம் என்றும் நினைக்கிறேன். பக்காவான உள்ளூர் சுவையில் அதேசமயம் உலகத்தரத்தில் இதை வழங்குகிறோம்” என்கிறார் கார்த்தி.

“திரையுலகில் சகோதரர்கள் ஒரே காலகட்டத்தில் நடிகர்களாக பயணித்து வருவது அரிதான ஒன்று.. அதனால் அண்ணனுடன் (சூர்யா) எப்போது ஒரே படத்தில் இணைந்து நடிக்கப் போகிறீர்கள் என பலரும் கேட்கின்றனர். நானும் அண்ணனும் சேர்ந்து நடிப்பதற்கான பொருத்தமான கதைகளை இருவருமே கேட்டு வருகிறோம். முன்பு கூட பயந்தேன்.. ஆனால் இப்போது உறுதியாக இருக்கிறேன். அதனால் நிச்சயமாக இருவரும் இணைந்து நடிப்போம்..” என ஒரு சந்தோஷ தகவலையும் ரசிகர்களுக்கு பரிமாறியுள்ளார் கார்த்தி.

#ஜப்பான் படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ புகழ் நலன் குமாரசாமி இயக்கத்தில் பேண்டஸி ஆக்சன் படமாக உருவாகி வரும் படம் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தாக ‘96’ புகழ் சி.பிரேம்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார் கார்த்தி.