ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, கடந்த 20 வருட திரையுலக பயணத்தில் பத்திரிகையாளர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்..
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “ஒவ்வொரு முறை படம் பார்த்துவிட்டு நீங்கள் என்னிடம் கூறிய கருத்துக்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. குறிப்பாக மெட்ராஸ் திரைப்படம் வெளியானபோது, இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று நீங்கள் கூறினீர்கள். ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுக்கும்போது நான் கவனமாகவே இருந்திருக்கிறேன். அதன்பிறகு இன்னுமே கவனமாக இருந்திருக்கிறேன் என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநரிடமும் பணியாற்றியபோது ஒரு புது அனுபவமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமான பார்வையாளர்களிடம் சென்று சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நான் உதவி இயக்குநராக பணியாற்றியபோது பொன்னியின் செல்வன் என்கிற கதையை பற்றி ஒரு வரியில் தான் தெரியும். ஆனால் தற்போது அந்த படத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததாகட்டும், அதன்பிறகு இந்த 25 வது படத்திற்கு விழா எடுத்து அதில் நீங்கள் எல்லோரும் வந்து கலந்து கொண்டதாகட்டும், ரொம்பவே சந்தோசமான ஒரு பயணமாகவே இருந்திருக்கிறது.
இன்றைக்கு ஒருவரை நாம் சந்திக்கும் முன்பே அவரது பிளஸ், மைனஸ் என ஒரு மதிப்பீடு இணையதளம் மூலமாக கிடைத்து விடுகிறது. நல்லவேளையாக அந்த காலகட்டத்திற்கு முன்னதாக நான் வந்து விட்டேன். எனது அறிமுகம் உங்கள் மூலமாக நடந்தது. நீங்கள் மக்களிடம் என்னை சரியான முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை வெளியூர் செல்லும்போதும் அதை நான் உணர்கிறேன். அந்தவகையில் தொடர்ந்து உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. அது தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஜப்பான் படத்தின் ரிலீசுக்கு முன்பாக உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்பினேன். ஒரு விரிவான புரமோஷன் நிகழ்ச்சியாக அனைத்து ஊர்களுக்கும் சென்றுவர வேண்டி இருந்தது. தீபாவளி ரிலீஸ் எனக்கு எப்போதுமே ஸ்பெஷலாக இருந்திருக்கிறது. அந்தவகையில் இந்த வருடமும் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதில் ரொம்பவே சந்தோஷம். இயக்குனர் ராஜூ முருகனுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. அவரது எழுத்து பிடித்திருந்தது. ரவிவர்மனின் விஷுவல்ஸ், ஜி.வி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். வாகை சந்திரசேகர், சுனில் ஆகியோருடன் இணைந்து நடித்தபோது என்னுடன் நிறைய விஷயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டவர். அதனால் எனக்கு இந்த படம் நிச்சயம் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என நம்புகிறேன்.
இதுவரை ஒரு படம் முழுவதும் ‘கார்த்தியே’ தெரியாமல் நடித்திருக்கிறேன் என்றால் அது இந்த படம் தான். இதற்கு முன் காஷ்மோராவில் ஃப்ளாஷ்பேக்கில் வில்லனாக வரும் கதாபாத்திரம் மட்டும் அப்படி இருந்தது. ஆனால் படம் முழுவதும் அப்படி கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்று அந்த வாய்ஸ் அனைவருக்குமே பிடித்திருக்கிறது. அந்த வசனத்தை அனைவருமே கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது நிச்சயமாக படத்தில் ஒர்க் அவுட் ஆகும் என்பது எனது நம்பிக்கை. அதேசமயம் சுவாரசியமாகவும் இருக்கிறது. வரும் தீபாவளியன்று படம் வெளியாகும்போது திரையரங்கில் உங்களை சந்திக்கிறேன்” என்றார்.