அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க வந்த அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் வாடிப்பட்டியில் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூரில் இன்று மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்க திமுக. எம்.எல்ஏ., மூர்த்தி வந்தார். அப்போது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது போல் சமத்துவமக்கள் கட்சியை சேர்ந்த நடிகர் சரத்குமார், வாடிப்பட்டி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனிதச்சங்கிலி அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஒரு பதட்ட சூழல் உருவானது. இதனை உணர்ந்த போலீசார் சரத்குமாரிடம் , திரும்பி சென்று விடுங்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து சரத்குமார் திரும்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்: எனது சொந்த ஊர் பரவை அருகே உள்ளது. நாங்களும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். சிலரது தூண்டுதல் காரணமாக இது போல் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுய நலநோக்கம் மற்றும் அரசியல் காரணமாக வரவில்லை. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எனது ஆதரவை தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.