ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மையப் புள்ளியாக இருந்த 136 பேரின் பங்கே வெற்றிக்கு அடித்தளம்

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை கட்டிக்காக்க நேற்று மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களும், இளைஞர்களும் கிளர்த்தெழுந்தனர். சுமார் 30 லட்சம் பேர் நேற்றையப் போராட்டங்களில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இதுவரை கண்டிராத புதிய புரட்சியாக இது கருதப்படுகிறது. சென்னையில் நேற்று மெரீனா கடற்கரையில் சுமார் 12 லட்சம் பேர் திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். பந்தா காட்டும் அரசியல்வாதிகளோ, மாய மயக்கம் ஏற்படுத்தும் சினிமா நடிகர், நடிகைகளோ இல்லாமல் முழுக்க – முழுக்க பொதுமக்களின் தன்னெழுச்சியாக இந்த அறப்போர் நடந்தது. ஒவ்வொரு தமிழனும் தன் இனப் பாரம்பரியத்தை பாதுகாக்க யாரும் சொல்லாமலே, தாமாக முன் வந்து, தங்களை போராட்ட களத்தில் இணைத்துக் கொண்டனர். சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து இந்த புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது. எந்த ஒரு தொடக்கத்துக்கும் நிச்சயம் ஒரு மையப்புள்ளி இருக்கும். அந்த மையப் புள்ளியில் இருந்து கிளம்பும் சிறு தீப்பொறிதான் பிறகு கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீயாக மாறும். இளைஞர்கள் போராட்டத்துக்கும் அந்த மையப்புள்ளி உள்ளது. அதை கண்டுபிடிக்க கடந்த 4 நாட்களாக உளவு துறை படாதபாடுபட்டது. ஆனால் அவர்களால் அந்த மையப் புள்ளியை நெருங்கக் கூட இயலவில்லை. உண்மையில் தமிழகத்தை தட்டி எழுப்பிய அந்த மையப் புள்ளியாக 136 பேர் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளது. யார் இந்த 136 பேர்? என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆர்வம் ஏற்படலாம். இந்த 136 பேரும் ஒரு கை ஓசையாக செயல்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை ஜல்லிக்கட்டு ஒன்று சேர்க்கவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளம்தான் ஒன்று சேர்த்திருந்தது. சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த போது இணையத்தளத்தில் இவர்கள் 136 பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களை காப்பாற்ற இந்த 136 பேரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஒரு பெரிய வட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்த வட்டம்தான் சென்னையில் வெள்ளச் சீற்றம் ஏற்பட்டபோது இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்தது. மாநில அரசு உதவிக்கு வரும் முன்பு இளைஞர்கள் களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைத்து விட்டனர். அப்போதே தமிழக இளைஞர்களின் எழுச்சியை மத்திய – மாநில அரசுகள் சற்று மிரட்சியுடன்தான் பார்த்தன. அந்த 136 ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்ட இளைஞர்கள்தான் தற்போதைய ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் வித்திட்டனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ள தடையை உடைத்தால்தான் தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை காப்பாற்ற முடியம் என்ற யதார்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே இந்த 136 ஒருங்கிணைப்பாளர்களும் தங்கள் குழுக்கள் மூலம் மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். முதலில் 20 பேர் வந்தனர். இது 200 ஆக மாறியது. பிறகு 2 ஆயிரமானது. அன்று மதியமே அந்த குழுக்களில் உள்ள 2 ஆயிரம் பேர் கடற்கரைக்கு வந்து விட்டனர். இந்த 2 ஆயிரம் பேரையும் எளிதில் சமாளித்து அனுப்பி விடலாம் என்றே போலீசார் நினைத்தனர். ஆனால் அந்த 2 ஆயிரம் பேரின் வாட்ஸ்அப், பேஸ்புக்குகளில் இருந்து பரவிய போராட்ட அழைப்புகள் அணி, அணியாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், மாணவர்களையும் மெரீனாவுக்கு அழைத்து வந்து விட்டது. அதை பார்த்த பிறகே எப்படி வந்தனர்? எங்கு இருந்து வந்து குவிந்தனர்? என்று போலீசார் திணறிப் போனார்கள். ஆனால் 136 ஒருங்கிணைப்பாளர்கள் திணறவில்லை. தங்கள் போராட்டத்தை கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் முன்னெடுத்து செல்ல மிக, மிக நேர்த்தியாக திட்டமிட்டனர். போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த இந்த 136 ஒருங்கிணைப்பாளர்களும் 12 குழுக்களாகப் பிரிந்தனர். இந்த 12 குழுக்களில் ஒவ்வொரு குழுவிலும் சுமார் 200 பேர் உள்ளனர். ஆக 12 குழுக்களிலும் சுமார் 2400 தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பொறுப்புகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள்தான் தினமும் மெரீனா கடற்கரையில் நடக்கும் அறப்போராட்டத்தை மிகத் தெளிவாக, துணிவாக நடத்தி வருகிறார்கள். 2400 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட இந்த 12 குழுக்களும் உணவு, சுகாதாரம், துப்புரவு, பிரசாரம், தண்ணீர் சப்ளை, மருத்துவம், போக்குவரத்து போன்ற 12 முக்கிய தேவைகளை நிறைவேற்றும் பிரிவுகளாக உள்ளன. இந்த 12 குழுக்களுக்கும் தனி தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தந்த குழு உறுப்பினர்கள் அந்த வாட்ஸ்அப் தகவல்கள் அடிப்படையில் தங்கள் பணிகளை செய்து முடிக்கிறார்கள். இதனால்தான் மெரீனா கடற்கரை போராட்ட களம் ராணுவ அமைப்பு போல கட்டுப்பாடுடன், கட்டுக்கோப்பாக உள்ளது. போராட்ட களத்தில் எந்த சிறு சலசலப்பும், சர்ச்சையும் ஏற்படாததற்கு இந்த 12 குழுக்களின் சிறப்பான ஒருங்கிணைப்பே அடித்தளமாக உள்ளது. அது மட்டுமின்றி போராட்டத்தின் ஒவ்வொரு முடிவையும் இந்த 12 குழுக்கள் தினமும் பேசி எடுக்கிறார்கள். மேலும் 136 ஒருங்கிணைப்பாளர்களும் தினமும் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது நிறை-குறைகளை விரிவாக விவாதிக்கிறார்கள். அந்த விவாதத்துக்குப் பிறகு ஏகமனதாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போராட்ட களத்துக்குள் அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் அனுமதிக்க கூடாது என்ற முடிவை 136 ஒருங்கிணைப்பாளர்களும் இப்படித்தான் எடுத்தனர். மெரீனா போராட்டத்தை வெற்றி பெறச் செய்த 136 ஒருங்கிணைப்பாளர்களில் பெண்கள், கல்லூரி மாணவிகளும் உள்ளனர். ஐ.டி. நிறு வனங்களில் பணிபுரிபவர்களும் கணிசமாக உள்ளனர். அவர்களது பணி நேரம் பாதிக்காதபடி போராட்ட பணிகள் வழங்குகிறார்கள். இந்த ஒருங்கிணைப்பும் போராட்டம் எழுச்சியாக மாற உதவியது.  17 மற்றும் 18-ந்தேதிகளில் இளைஞர்களும் மாணவர்களும் தன்னந்தனியாக போராடும் நிலையில்தான் இருந்தனர். ஆனால் உணவு, தண்ணீர் போன்றவற்றை தாராளமாக தரும் வகையில் நன்கொடையாளர்கள் வரத் தொடங்கியதும் 136 ஒருங்கிணைப்பாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். நம்ம இனத்துக்காக, நம்ம கலாச்சாரத்துக்காக, நம்ம வீட்டுப் பார்வைகள் கடற்கரையில் கடும் குளிரிலும், பனியிலும் தூங்கி எழுந்து போராட்டம் நடத்துகிறார்களே…. அவர்களுக்கு சோறு கொடுப்போம், தண்ணீர் கொடுப்போம், பிஸ்கட் கொடுப்போம் என்று நிறைய தமிழ் உணர்வாளர்கள் முன் வந்தனர். போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல இது திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அதன் பிறகு மாணவர்கள், பொதுமக்கள் சாரை, சாரையாக மெரீனா கடற்கரைக்கு வரத் தொடங்கியதும், 136 ஒருங்கிணைப்பாளர்களும் போராட்ட களத்தை கட்டுக்கோப்பான பாதைக்கு அழைத்து சென்றனர். மாணவர்களின் போராட்டத்தில் நெகிழ்ந்த சிலர் ஒன்று சேர்ந்து 1300 போர்வை வாங்கிக் கொடுத்தனர். சில பிரபலமான உணவகங்கள் தாமாக முன் வந்து உணவு பொட்டலங்கள் கொடுத்தன. கோயம்பேட்டைச் சேர்ந்த வியாபாரிகள் பழ வகைகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தனர். சில தனியார் அமைப்புகள் பிரியாணி தயாரித்து வழங்கின. இதிலும் சில அமைப்புகள் குளிர்காய நினைத்தன. சில கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட முயன்றன. பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை குறி வைத்து விமர்சனம் செய்யத் தொடங்கின. இது போராட்ட களத்தை திசை திருப்பி விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டது. ஆனால் 136 ஒருங்கிணைப்பாளர்களும் மிக, மிக நேர்த்தியாக செயல்பட்டு, அத்தகைய சேவை அமைப்புகளை தவிர்த்தனர். புறக்கணித்தனர். இதனால் மெரீனா போராட்ட களம் அதிர்ஷ்டவசமாக தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் இலக்குடன் மிகச்சரியான பாதைக்கு சென்றது. அதன் பிறகே இளம் பெண்களும், பொதுமக்களும் புதிய உத்வேகத்துடன் புற்றீசல் போல புறப்பட்டு வந்து மெரீனா கடற்கரையை நிறைத்து விட்டனர். அவர்கள் மட்டுமல்ல துப்புரவு தொழிலாளர்கள் கூட எந்த பிரதிபலனும் பாராமல் மெரீனா போராட்ட களத்தில் உணர்ச்சி குரலில் ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த உண்மைதான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை உன்னதமாக மாற்றியது. 136 ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். 12 குழுக்கள் அந்த போராட்டத்தை கட்டுப்பாடுடன் இயங்க வைத்தன. மாணவர்களும், பொதுமக்களும் அதை வெற்றி கிரீடமாக மாற்றி விட்டனர்.