நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று பட்டாசுகளின் சத்தத்தை விட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலியின் சத்தம் தான் அதிகம். நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ வெளியானது.
இதனை கண்டு ரசித்த பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நீதிமன்றத்தை மையப்படுத்திய ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களின் பாராட்டுகளை இடையறாமல் வழங்கி வருகிறார்கள்.
இயக்குநர் தா செ ஞானவேல், கலைஞர்கள் சூர்யா, லிஜோ மோள் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் என இந்த படத்தில் நடித்த அனைவரும் நடிகர்களாக திரையில் தோன்றாமல், அந்தந்த கதாபாத்திரத்திற்கு உரிய இயல்புடன் நடித்ததால் ஏராளமானவர்கள் பாராட்டுகிறார்கள்.
தமிழக முதல்வரான மாண்புமிகு மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களின் ஆதரவை மனமுவந்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரை உலகின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும், பிரபலங்களும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களுடைய சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் தன்னுடைய சுட்டுரையில்,”சில திரைப்படங்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து, உங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்ள தூண்டுகின்றன. சூர்யா மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் புத்திசாலித்தனமான படைப்புத்திறன், படத்தை ஈடுபாட்டுடன் காணத் தூண்டுகிறது. உன்னதமான படைப்பு. அதன் நோக்கத்துடன் உங்களையும் கவர்ந்திழுக்கிறது.” என பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய சுட்டுரையில், ” சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. ‘ ‘ஜெய் பீம்’ என்ற உன்னதமான படைப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சுட்டுரையில்,”ஜெய் பீம் துணிச்சலான படைப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்துவதுடன், நீதித்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. தவறாமல் காண வேண்டிய அற்புதமான படைப்பு.” என பதிவிட்டிருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நடிகரான நானி தன்னுடைய சுட்டுரையில்,”ஜெய் பீம் படம் பார்த்தேன். சூர்யா சாருக்கு மரியாதை கலந்த வணக்கம். படத்தில் செங்கேணி மற்றும் ராஜாகண்ணுவாக நடித்த நடிகர்களின் நடிப்பு தனித்துவம் மிக்கது. ஒப்புயர்வற்ற மாணிக்கம் போன்ற இந்தப் படைப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், அவர்களது கடின உழைப்பிற்கும் என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநர் பா ரஞ்சித் தன்னுடைய சுட்டுரையில், ”சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே- இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும். அது நம் தலை முறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்! ”என பதிவிட்டிருக்கிறார்.
இதனை தவிர்த்து இந்திய அளவில் சமூக வலைதளப் பக்கத்தில் தீவிரமாக இயங்கிவரும் ஊடகவியலாளர் சோலி அமண்டா பெய்லி, நடிகர் சித்தார்த், நடிகர் யோகிபாபு, நடிகரும், இயக்குநருமான எஸ் ஜே சூர்யா, கொல்கத்தா ஐஐடியில் பணி புரியும் ஆணையர் சுக்ரீவ் மீனா, ஒடிசா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் விஜய் ஐஏஎஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றும் சந்தோஷ் சிங் ஐபிஎஸ், தகவல் தொடர்பு துறையில் தொழில் முனைவோராக திகழும் மயூர் சேகர் ஜா, தமிழ் திரையுலகின் அதிரடி விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட ஏராளமானவர்களின் நேர்மறையான பாராட்டை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பேராதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ படத்தின் அற்புத தருணங்களையும், உன்னதமான படைப்பினையும் இதுவரை கண்டு ரசிக்காதவர்கள் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் காணக் கிடைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘ஜெய் பீம்’ தமிழகத்தில் 1990களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சிந்தனையை தூண்டும் வகையில் வேகமான திரைச்சித்திரமாக உருவாகியிருக்கிறது.
கடின உழைப்பாளிகளான செங்கேணி மற்றும் ராஜாகண்ணு தம்பதியினரின் வாழ்க்கையை அணுக்கமாக காண நம்மை அழைத்துச் செல்கிறது. ராஜாகண்ணு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகிறார். அதன்போது அவர்களின் உலகம் சிதைகிறது. செங்கேணி தனது கணவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக்கொணர்வதற்காகவும், பழங்குடியின பெண்ணுக்கு நீதி கிடைக்கவும் அனைத்துவகையான இடையூறுகளையும் எதிர்த்து போராடி ரசிகர்களின் மனதை வெற்றி கொள்கிறார்.