இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வழக்கத்திற்கு மாறான கவர்ச்சிகரமான தலைப்பு முதல் ஜிப்ரானின் மெல்லிசையான பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை தகிக்கும் வெயிலில் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு, கானல் நீரை கண்டு ஏமாந்து கிடந்த மக்களுக்கு கிடைத்த பெருமழையை போல பொழிந்துள்ளது. இவை அனைத்தும் படத்துக்கு நேர்மறையான பண்புகளாக மாறிவிட்டன. உண்மையான சம்பவங்களின் தாக்கத்தில் இருந்து உருவான இந்த அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான காதல் கதையில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர், “பசங்க” கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூன் 28, 2019 அன்று உலகளவில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுக்கு சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்த பிறகு மிகுதியான பாராட்டுக்களை படக்குழுவுக்கு அளித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறும்போது, “இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே, இது ஒரு அழுத்தமான கருப்பொருளை கொண்டிருக்கிறது, நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்றும் நான் நம்பினேன். ஆனால் அது எனது எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறி என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. படம் முழுவதும், லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய பரிமாணத்தைப் பார்த்து நான் மகிழ்ந்தேன். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், வெறும் பார்வையாளராக இருக்கும் நம்மை அந்த குடும்பத்தின் ஒரு பார்வையாளராக மாற்றும் மாயாஜாலம் தான். எந்த ஒரு முகத்திலும் சினிமா நிழல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. வசன உச்சரிப்பு, நடிப்பு, முகபாவனை என நடித்த ஒவ்வொருவரும், படத்தில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பானதாக இருந்தது. கடுமையான சென்னை வெள்ளத்தின் போது நான் சென்னையில் இருந்தபோதிலும், அங்குள்ள மக்களின் உண்மையான வலியை நான் உணரவில்லை, ஆனால் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மறக்கமுடியாத வேதனையான தருணங்களின் துயரமான சித்தரிப்பை ஒரு துல்லியமான பார்வையுடன் அவர் மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார். அத்தகைய ஒரு யதார்த்தமான கதையை அவர் எப்படி சிந்தித்தார் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை, உண்மையில் இந்த கதை என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது. சகோதரிகள் மற்றும் நடிகைகளான விஜி, சரிதா இருவருக்குமே அனைவரையும் ஈர்க்கும், முகபாவனையை சிறப்பாக வெளிப்படுத்தும் கண்கள் உண்டு. தற்போது விஜியின் மகள் அதே கவர்ச்சியான பண்புகளைக் கொண்டிருப்பது சிறப்பு. தொழில்நுட்ப கலைஞர்கள் தான் படத்தின் முழுமையான ஆன்மா. அவர்கள் தான் கதாபாத்திரங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள். “ஹவுஸ் ஓனர்” படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும், இத்தகைய சிறந்த திரைப்படத்தை வழங்கியதில் பெருமிதம் கொள்ளலாம் என்று நான் கூறுவேன்” என்றார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் (படத்தொகுப்பு), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), கார்க்கி, அனுராதா (பாடல்கள்), எம்.வி.ரமேஷ் (தயாரிப்பு நிர்வாகம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது ஏஜிஎஸ் சினிமாஸ்.