தொழில் நுட்பம் பெருகினாலும் சினிமாவில் கதை சொல்வது தான் முக்கியம் என இந்தி பட இயக்குனர் ஹன்சல் மேத்தா கூரியுள்ளார். எல்.வி.பிரசாத் ஃபிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11-வது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் பிரபல இந்திப் பட இயக்குநரான ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் ஹன்சல் மேத்தா பேசும்போது,
“ஒரு விருது வாங்க எனக்கு 15 வருடங்கள் ஆகியது. நீங்கள் இப்போதே வாங்கியிருக்கிறீர்கள். அந்த ஸ்பிரிட்டை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.அடிப்படையில் நான் ஒரு எஞ்சினியர். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு இயக்குநரானதே விபத்துதான். ‘ஷாகித்’ படத்துக்கு முன்பு 9 படங்கள் இயக்கியிருந்தாலும், ஷாகித் என் இரண்டாவது இன்னிங்ஸ். ‘ஷாகித்’ என்னுடைய டிப்ளமோ திரைப்படம் போன்றது. ‘ஷாகித்’ படத்தை நான் 35 லட்சத்தில், 11 மாதத்தில் எடுத்து முடித்தேன். டிஜிட்டல் யுகத்தில் கெனான் 5-டி கேமராவில்தான் பெரும் பகுதி படத்தை படம் பிடித்தேன்.
என்னதான் தொழில் நுட்பங்கள்தை வளர்ச்சியடைந்திருந்தாலும் சினிமாவில் கதை சொல்வதுதான் முக்கியம். என்னுடைய கதை எப்படி பலரை போய் சென்றடையும் என்பதைத்தான் யோசிப்பேன். இப்போது ‘நேதாஜி’ பற்றி வெப் சீரீஸை இயக்கி வருகிறேன். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைக்காக நான் படம் எடுப்பதில்லை. நான் எதிர்காலத்துக்காக படம் எடுக்கிறேன். டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தால் நாம் நினைத்த கதையை எந்த இடையூறும் இன்றி சொல்ல முடியும். முதலில் உங்கள் படத்துக்கு நல்ல ரேட்டிங் வாங்க முயலுங்கள், நூறு கோடி வசூலை பின்பு பார்த்துக் கொள்ளலாம். சினிமா என்பது முற்றிலும் ஒரு கலை. அதில் நாமும் ஒரு பங்காக இருப்பது கண்டு பெருமைப்படுங்கள்” என்றார்.