கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் அறிமுக நடிகர் இஷான்

எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்த படத்தில் தாராவி பகுதியை சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
இப்படத்திற்காக தாராவி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜீத் மஜீதி தேர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்கவைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள். ஆகாசும், இஷானும் நெருங்கிய நண்பர்களாக படத்தில் வருவதால், இயக்குநரின் கட்டளைப்படி இருவருமே படபிடிப்பு தளத்திற்கு பின்னாலும் ஒன்றாக சுற்றி வந்தனர். அவர்களின் இந்த பந்தம் திரையில் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி படக்குழுவினரிடம் கேட்ட போது,‘ இந்த படத்தில் இஷானின் நடிப்பிற்கு பின்னணியாக இருந்தது இயக்குநர் மஜீத் மஜிதியின் திரை பார்வை தான். இஷான் ஒவ்வொரு காட்சி படமாக்கப்படும் முன் அந்த காட்சியைப் பற்றி மிகவும் அக்கறையுடன் கேட்டு தெரிந்துகொண்டு, இயக்குநரின் எதிர்பார்ப்பை உள்வாங்கி நடித்திருக்கிறார். படபிடிப்பிற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்கவிருக்கும் தாராவி பகுதி இளைஞர்களுடன் இஷான் ஒன்றாக பழக ஆரம்பித்துவிட்டார். அவர்களுடன் பழகி அவர்களின் உலகம் எப்படி இயங்குகிறது? அவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர்களின் உடல் மொழி, பேச்சு, பாவனை போன்றவற்றை உற்று கவனித்துக் கொண்டேயிருப்பார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? என்பதை அறிந்து அதனை அப்படியே காட்சியில் பிரதிபலித்திருக்கிறார் இஷான்.
படபிடிப்பிற்கு முன்னரும், படபிடிப்பிற்கு பிறகு இஷானும் ஆகாசும் ஒன்றாகவே திரிவார்கள். படபிடிப்பிற்கு முன்னரே இஷானுக்கு, ஆகாஷ் ஒரு ராப்பர் என்று தெரியவந்திருக்கிறது. ராப் இசையில் பாடக்கூடிய திறமைப் பெற்றவர் என்பதை அறிந்ததும், அவரிடமிருந்து ஒரு சில பாடல் வரிகளை இவரும் கற்றிருக்கிறார். படத்தில் இஷான் குத்துச்சண்டை தெரிந்தவராக நடிக்கிறார். தனித்தனி திறமைகளுடன் இருக்கும் இருவரும் நண்பர்களாகிவிட்டனர்.
இந்நிலையில் தன்னுடன் நடித்த ஆகாஷைப் பற்றி இஷான் பேசும் போது,‘ இந்த படத்திற்காக ஆகாஷை தேர்ந்தெடுக்கும் போது இவரும் இவரது நண்பர்களான ராகுல், நவீன் மற்றும் பால் ஆகியோர் தாராவி பகுதியில் சிறந்த ராப் கலைஞர்களாக இருந்தனர். இவர்களை இப்படத்திற்கு பைனல் ஆடிசன் போது சந்தித்தேன். இயக்குநர் மஜீத் சார், இவர்களுடன் என்னையும் வைத்து ஒரு டெஸ்ட் சூட் நடத்தினார். அப்போது சென்ஸ் என்ற கேரக்டரில் நடிக்கும் ஆகாஷ் சிறப்பாக நடித்தார். பிறகு அவர்களுடன் இணைந்து ராப் பாடலை கற்றுக் கொண்டே குத்துச்சண்டை போடுவதற்கும் பயிற்சி பெற்றோம். அதன் பின்னரே தாராவி பகுதியை அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தோம். அப்போது உண்மையிலேயே என்னுடைய அமீர் என்ற கேரக்டரை எனக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டேன். என்னைப் போன்றே அவர்களும் இசை மற்றும் நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் அனைவரும் ஒன்றாக கூடி பழக முடிந்தது. படபிடிப்பு முடிந்தபிறகும் தற்போது கூட நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். சந்தித்து நட்பு பாராட்டுகிறேன்.’ என்றார்.
ஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பியாண்ட் த க்ளவுட்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியாகிறது.