இண்டர்நெட்டில் சமீபத்தில் வெளியான தகவல்கள் ஒன்றில் ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால்களுக்கு 1000 நிமிடங்களுக்கு பின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டது. ஜப்பானை சேர்ந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தனியார் செய்தி தளம் ஒன்றில் இந்த தகவல் வெளியானது. இதில் முதல் 1000 நிமிடங்களுக்கு பின் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. எனினும் ஜியோ எண்களுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ஸ் கால்களை இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போல் ஜியோ பிரைம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டும், குறைந்த பட்சம் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யவில்லை எனில் ஜியோ பிரைம் திட்டம் தானாக டீஆக்டிவேட் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ செய்தி தொடர்பாளர் தகவலின் படி இண்டர்நெட்டில் வெளியான தகவல் முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார். ஜியோ இணையதளத்தில் வாய்ஸ் கால்கள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது, இதன் பின் ஜியோ 4ஜி டேட்டாவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். முன்னதாக ஜியோ அறிவிப்பி்ன் படி வாடிக்கையார்கள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் சேவையை பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் ஹேப்பி நியூ இயர் சலுகையை ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க முடியும்.