ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் பார்மர் மாவட்டத்தின் சடர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷிவ்கர் கிராமத்தில் இருக்கும் வயல்வெளியில் இன்று பிற்பகல் விழுந்து நொறுங்கியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலை விமானப்படை அதிகாரிகளுக்கு தெரிவித்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற இரு பயிற்சி விமானிகளும் அவசர கதவை திறந்து, பாரசூட் வழியாக கீழே குதித்து உயிர் தப்பியதாகவும், இந்த விபத்தில் ஷிவ்கர் கிராமத்தை சேர்ந்த ஒரு குழந்தை, பெண் உள்பட மூன்றுபேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.