இந்திய பேட்ஸ்மேன்களை மனரீதியாக சோர்வடையச் செய்வதே கேப்டன் விராத் கோஹ்லிதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான மார்க் வாக் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் படு பயங்கரமாக சொதப்பி வருகிறது. புனேயில் நடைபெற்ற டெஸ்ட்டிலும், பெங்களூரில் நடந்து வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலுமாக சேர்த்து மொத்தம் 3 இன்னிங்சுகளிலும் இந்தியாவால் தலா 200 ரன்களை கடக்க முடியவில்லை. இந்நிலையில் மார்க் வாக், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கோஹ்லியின் மனநிலை குறித்து தனது கவலையை அவர் வெளியிட்டுள்ளார்.
இதுப்பற்றி மார்க் வாக் கூறியுள்ளதாவது, விராட் கோஹ்லி மனதளவில் பதற்றத்தில் உள்ளார். கடந்த முறை அவர் எல்.பி.டபிள்யூ ஆன முறையை வைத்து பார்த்தாலே அதை தெரிந்து கொள்ளலாம். பந்து இடுப்பை நோக்கி வருவதை இந்திய பேட்ஸ்மேன்கள் அல்வா போன்று பயன்படுத்துவதுதான் வழக்கம். கோஹ்லி அதில் கோட்டை விட்டார். கோஹ்லியின் அருகே ஃபீல்டர்களை நிறுத்தி வைத்திருந்ததால், பந்தை லெக்சைடில் திருப்ப அவர் அச்சமுற்றதை கவனிக்க முடிந்தது. பந்து எதிர்பார்த்ததைவிட பவுன்ஸ் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால் பேட்டால் தொடாமல் எல்.பி.டபிள்யூ ஆனார்.
கோஹ்லியின் இயல்புக்கு மாறாக அவரது ஆட்டம் உள்ளது. ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இப்படி நெகட்டிவாக யோசிக்க கூடாது. அந்த பந்தை ஸ்வீப் செய்து ரன் எடுத்திருக்க வாய்ப்பு இருந்தது. விளையாட்டில் மிகுந்த கவனம் வைத்து ஆட வேண்டும். ஆனால், கோஹ்லி அதை செய்யவில்லை. கோஹ்லி எப்படி ஆட வேண்டுமோ அதற்கு நேர் எதிராக ஆடுகிறார். இவரது இந்த நெகட்டிவ் எண்ணம், பிற வீரர்களில் சிலரையும் சேர்த்து கெடுத்துவிடுகிறது. ஆஸி. பவுலர்கள் லியோன் மற்றும் ஓ’கீபேவுக்கு எதிராக மிகவும் நெருக்கடியோடு இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடுகிறார்கள்.
புனே பிட்சை ஒப்பிட்டால் பெங்களூர் பிட்ச் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை. சில நேரங்களில் பந்து தாழ்வாக வருகிறது. சில நேரங்களில் அதிகமாக ஸ்பின்னாகிறது. சில நேரங்களில் ஸ்பின் ஆவதில்லை. பேட்டிங்கிற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றபோதிலும், புனே பிட்சுடன் ஒப்பிட்டால் பெங்களூர் பிட்ச் அச்சுறுத்தல்விடுப்பதாக இல்லை என்றார் மார்க் வாக்.