இந்தியாவின் சிக்கிம் எல்லையான டோக்லாம் பகுதியில், சீனா அத்துமீறி சாலை அமைக்க முயன்றது. சீனப் படைகள் சாலையை விரிவாக்கும் பொருட்டு இந்திய எல்லைப்பகுதியை கைப்பற்ற முயன்றதால், இந்தியப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் பல வாரங்களாக அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. இருநாடுகளும் ஒருவரையொருவர் தங்கள் படைகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இரு நாட்டின் வெளியுறவுத்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, டோக்லாம் பகுதியில் உள்ள படைகளை திரும்ப பெற இந்திய-சீன அரசுகள் முடிவு செய்துள்ளன. சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்லாம் எல்லை பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.