அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பாதசாரிகள் செல்போன் பயன்படுத்த தடை

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான ஹோனோலுலுவில் இருக்கும் சாலைகளை கடந்து செல்லும் பாதசாரிகள் தங்களது செல்போனை பயன்படுத்திக்கொண்டே செல்வதால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் விதமாக அந்நகர நிர்வாகம் ஓரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதசாரிகள் சாலையை கடக்கும் போது செல்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றின் மூலம் குறுந்தகவல் அனுப்புவது ஆகியவற்றுக்கு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கவனமில்லாமல் சாலைகளை கடக்கும் போது ஏற்படும் காயம் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை குறைக்கும் பொருட்டு, வரும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. டிஜிட்டல் கேமிரா, லேப்டாப் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை நடந்து செல்லும் போது பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு, முதலில் 15 முதல் 35 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்பவர்களுக்கு 99 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்திக் கொண்டே சாலையில் கவனம் இல்லாமல் நடந்து சென்றதன் விளைவாக, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 11,100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. எனினும், அவசர உதவிக்காக செல்போனிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக கூறி இந்த தடைக்கு சில மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.