கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதை அவசர வழக்காக நீதிமன்றம் இன்று தானாக முன் வந்து விசாரித்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், “ப்ளூவேல் விளையாட்டை பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் ஷேர் இட், பேஸ்புக் மூலமாக பகிரப்படுகிறது. ஆதலால் மாணவர்கள் தான் கவனத்துடன் இருக்க வேண்டும்” என கூறினார். இந்த விசாரணையில் நீதிபதி, ப்ளூவேல் விளையாட்டை ஷேர் இட், பேஸ்புக் மூலமாக யாரேனும் பகிர்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.
ப்ளூவேல் கேம் பகிரப்படாமலே இருப்பதை உறுதி செய்ய டிஜிபி மற்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு ப்ளூவேல் விளையாட்டை பற்றி முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். சிபிசிஐடியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் லாவண்யா ஆகியோர் இந்த வழக்கின் எதிர்மனு தாரராக நியமிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 7ஆம் தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.