டோவினோ தாமஸ் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – திரிஷா

ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் அகில் பேசும்போது…
‘எங்கள் படம் ஐடென்டிட்டி இங்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. இந்தப்படம் பார்த்து, பாராட்டி கருத்து தெரிவித்த, அனைத்து நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இப்படத்தில் கதை, ஆக்சன் காட்சிகள் எல்லாம் உங்களுக்காக 1 1/2 வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கியது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி’ என்றார்.

நடிகர் வினய் பேசியதாவது..
அகில் 2020ல் இந்தப்படத்தின் கதை சொன்னார். யார் வந்தாலும், யார் வராவிட்டாலும், இந்தப்படம் நான் செய்வேன் என்றேன். பின் திரிஷா கமிட்டானதாகச் சொன்னார்கள். அப்போதே இந்தப்படம் வெற்றி என்பது புரிந்து விட்டது. என்னுடைய கேரியரில் இந்தப்படம் மாதிரி கதை வந்ததில்லை, டொவினோ தேர்ந்தெடுத்து படங்கள் செய்பவர். டொவினோ, அகில் இருவருக்கும் இந்தப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றிக் கூறிக்கொள்கிறேன். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் வந்தது. மிக மிக என்ஜாய் செய்தேன். தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்திற்குப் பெரிய வரவேற்பு தந்துள்ளீர்கள் நன்றி’ என்றார்.

நடிகர் டொவினோ தாமஸ் பேசும்போது..
‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எனக்கு தமிழ் அவ்வளவாக வராது. இந்தப்படம் 2020 யிலிருந்து நானும் அகிலும் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்போதே ஷாட் டிவிசனோடு தயாராக இருந்தார். இந்தப்படம் சீரியஸ் என்றாலும், ஷூட்டிங் ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது. தமிழில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய எந்தப்படம் தமிழில் வெளியானாலும், தமிழ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தருகிறார்கள். இன்னும் நல்ல தமிழ்ப்படங்களைத் தொடர்ந்து தருவேன். உங்களோடு என் படங்கள் பற்றி உரையாட எனக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அன்பிற்கு நன்றி’ என்றார்.

நடிகை திரிஷா பேசும்போது..
‘நான் உங்களை நிறைய தமிழ்ப் படங்களுக்காகச் சந்தித்துள்ளேன், முதல் முறையாக, ஒரு மலையாளப்படத்திற்காக சந்திக்கிறேன். பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். நிறைய மரியாதை உள்ளது. வருடத்திற்கு ஒரு மலையாளப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. ஐடென்டிட்டி டீமிற்கு மிகப்பெரிய நன்றி. மிக புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டோவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார். வினய் ரொம்ப காலமாகத் தெரியும். இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். இங்கு ரிலீஸ் நாளிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது. இப்போது தமிழில் கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

 

டோவினோ தாமஸ், திரிஷா இணைந்து நடித்துள்ள ஐடென்டிட்டி (IDENTITY) திரைப்படம் இந்த வாரம் ஜனவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானாலும், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளை தாண்டி அடுத்தடுத்த நாட்களில் திரையரங்கிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஐடென்டிட்டி படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது, மேலும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரின் கீழ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு, அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு மற்றும் சமன் சாக்கோவின் படத்தொகுப்பு, ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளனர். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது.