சென்சார் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன்; கொந்தளிக்கும் இயக்குனர் வாராகி.

‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது.

என்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி கொந்தளிக்கிறார்.

“கடந்த ஜூலை-16ஆம் தேதி ‘சிவா மனசுல புஷ்பா படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம்.. படத்தை பார்த்தவர்கள், சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள்.

சென்சார் போர்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு படத்திற்கு சான்றிதழ் அளிக்க என்ன தகுதி உள்ளது..?. சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உட்கார்ந்துகொண்டு படம் பார்த்தால் அவர்களுக்கு எப்படி எங்களின் வலி தெரியும்..? என அப்போது சென்சார் அதிகாரிகளுடன் நான் விவாதத்தில் ஈடுபட்டேன். இவற்றையெல்லாம் குறித்துக்கொண்டு டில்லியில் உள்ள கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.

டெல்லியில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சியாக சென்சாரில் நீக்க சொன்ன விஷயங்களுடன் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவும் சேர்ந்து வந்தது. அதுமட்டுமல்ல அதிரடி அரசியல் வசனங்களை மியூட் பண்ண சொல்லி, அதையே காரணம் காட்டி இந்தப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கிறோம் என சொன்னார்கள்.

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் நாங்கள் டெல்லியில் அப்பீல் பண்ணி இருக்கிறோம். படத்தை பொறுத்தவரை நாங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நிகழ்கால சம்பவங்களைத்தான் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறோம் .. அப்படியே இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள கதாபாத்திரம் நாமாகத்தான் இருக்குமோ என யாருக்காவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல ஆனால் சென்சாரோ நாங்கள் யாரையோ குறிப்பிட்டு சொல்கிற மாதிரி நினைக்கிறது…

இந்த பிரச்சனையின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. காரணம் இதைவிட மோசமான சில படங்களுக்கும் சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்படும் படங்களுக்கெல்லாம் மட்டும் எப்படி உடனே சான்றிதழ் கிடைக்கிறது.?

எத்தனையோ பொதுநல வழக்குகளை நான் பார்த்துள்ளேன்..இந்த பிரச்னையையும் முறைப்படி சந்தித்து படத்தை வெளியிடுவேன்.. அதற்காக ரிவைசிங் கமிட்டி செல்லவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று எங்களுக்கான நியாயத்தை பெற்று அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்யவும் தயங்கமாட்டேன்” என்கிறார் வாராகி எதையும் சந்திக்கும் துணிவுடன்…