அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் – சுரேஷ் மேனன்

சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம்  மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். 
 
இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, “சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது.
 
எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் இயக்குவதற்காக புதிய முகம் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன். அதற்காக நான் அவசரப்படவில்லை. சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தை செல்வழித்து வருகிறேன். கழிவறைகள் வடிவமைப்பது கட்டுவது என சமூக செயல்பாடுகளிலும் பங்கு ஈடுபட்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குனருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது” என்றார் பெருமையோடு.