தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தரச் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டதால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்களை போலீசார் வல்லுக்கட்டாயமாக வெளியேற்றினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னையின் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்ததால் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், வன்முறை ஏற்பட்டபோது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே போராட்டம் நடந்த மெரினா கடற்கரையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதையடுத்து போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது குறித்தும், காவல் நிலைய தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.