பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆசம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 ஒருநாள் போட்டிகளில் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1168 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 53.09 ஆகும். 4 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 116 ரன்கள் சேர்த்துள்ளார். மூன்று போட்டியில் அவுட்டாகாமல் இருந்துள்ளார். இதனால் சராசரி 116 ஆகும். இவரது ஆட்டத்திறனைப் பார்த்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் பாபர் ஆசமை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றன. தன்னை விராட் கோலியுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வரும் நிலையில், இந்திய அணிக்காக விராட் கோலி எப்படி சிறப்பாக விளையாடி வருகிறாரோ, அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக என்னால் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பாபர் ஆசம் கூறுகையில் ‘‘விராட் கோலி ஒரு மாதிரியாக விளையாடுபவர். நான் ஒரு மாதிரி விளையாடுபவன். என்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தி பாகிஸ்தான் வெற்றிக்காக விளையாடுவேன். கோலி இந்திய அணியின் வெற்றிக்காக எப்படி விளையாடுகிறாரோ, அதேபோல் பாகிஸ்தானுக்காக என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்காக நான் விளையாடும்போது மிட்செல் ஸ்டார்க் வேகப்பந்தை எதிர்த்து விளையாடியிருக்கிறேன். ஆனால் சர்வதேச போட்டியில் விளையாடும்போது அவர் பந்தை எதிர்கொள்வது மிகவும் மாறுபட்டவை. எனினும், ஆஸ்திரேலிய தொடரின் கடைசி கட்டத்தில் அவருடைய பந்தை எதிர்கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை’’ என்றார்.