14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் (SPARRC INSTITUTE), நாடு முழுவதும் விளையாட்டு மற்றும் ஆரோக்கிய மருத்துவ மையங்களைக் கொண்டுள்ளது. 14 மையங்களோடு பரந்து விரிந்துள்ள ஸ்பார்க் இன்ஸ்டிடியூட்டின் 14வது ஆண்டுவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் ஆண்டுவிழாவில் அதன் நிறுவனர் டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய `ஃபிட்னெஸ் ஸென்ஸ்’ மற்றும் ஃபிட்டோஃபீடியா நூல்கள் வெளியிடப்பட்டன.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்துவமானது என்று கூறும் நூலாசிரியர், “ஃபிட்னஸ், விளையாட்டு பற்றி எளிய முறையில் விளக்கும் ‘ஃபிட்னஸ் ஸென்ஸ்’ நூலில், விளையாட்டு வீரர்கள், யோகா, தற்காப்புக் கலைகள் பற்றி தெளிவாக விளக்கி உள்ளதாக” கூறியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவும் ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம் எல்லோர் வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்” என்று டாக்டர் கண்ணன் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மருத்துவத் துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவம் கொண்ட டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய நூலை, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் மேதகு திருமிகு ESL.நரசிம்மன் வெளியிட்டார். நூலை திரைப்பட நடிகர் ஆர்யா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, டாக்டர் கண்ணன் புகழேந்தியை சந்திப்பதற்குமுன் சதைப்பிடிப்பு பற்றி எந்த அறிவும் தமக்கு இல்லை என்று கூறினார்.அதைத் தீர்த்து வைக்கக்கூடிய அளவில் ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம் அமைந்து இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
ஆந்திர ஆளுநர் தமிழில் பேச்சு நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநர் ESL.நரசிம்மன், பேசும்போது, “நம்முடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த புத்தகங்களை அவசியம் படிக்கவேண்டும்” என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, “புதிரான துறையை எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளியமுறையில் டாக்டர் கண்ணன் புகழேந்தி விளக்கி இருப்பதாக” தெரிவித்தார்.
மூத்த விளையாட்டு மருத்துவரான கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு அளித்துள்ள பதில்கள்தான் ஃபிட்டோபீடியா நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. “ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களுக்கு முழுமையாக இந்த நூல் தீர்வு சொல்வதாக” கூறுகிறார் நூலாசிரியர் டாக்டர் கண்ணன் புகழேந்தி. நிகழ்ச்சியை டி.வி. தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார். விழாவில் திருமதி ஆளுநர் விமலா நரசிம்மன், நல்லிகுப்புசாமி செட்டியார், பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலி, டாக்டர் கண்ணன் புகழேந்தியின் பெற்றோர் ரமணி மற்றும் கண்ணன், தென் திருப்பதி ஆலயத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய அளவிலான 100 மீட்டர் 200 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ஷிவானி, தேசிய அளவிலான 400 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாஸ்டர் கே.ஆர். அரவிந்த் ஆகாஷ் இருவரும் விருது பெற்றனர். பயிற்சியாளர் டாக்டர் நடராஜன், 200 மீட்டர் தடகளப் போட்டியில் சாதனைப் படைத்தவர். கடந்த ஆண்டு இந்தியாவின் பெருமை விருதை ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐ.ஐ.எஸ்.எம்.-ல் இருந்து பெற்றவர். தன்னுடைய நூலுக்காக சர்வதேச விருது பெற்ற திருமதி சபிதா ராதாகிருஷ்ணனுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.