சென்னை அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 நாள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரிகளுக்கு இடையிலான இந்த நிகழ்ச்சி இந்தோத்சவ் 2019 என்ற பெயரில் பிப்.22, 23 தேதிகளில் நடைபெற்றது. விழாவில் 50 கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை நிரூபித்தனர்.
குழு நடனம், ஜோடி நடனம், பாட்டுக் கச்சேரி, வெரைட்டி ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்தனர். புகைப்படம், தனி பாட்டு, புதையல் போட்டி, பேஸ் பெயிண்டிங், தற்காப்பு பயிற்சி, கவிதைப் போட்டி, போஸ்டர் தயாரிப்பு, மீம்ஸ் தயாரிப்பு, ஆர்.ஜே., வி.ஜே. தகுதி சுற்று, காய்கறி சிற்பம், ரங்கோலி, சுவர் ஓவியம், திருமண அலங்காரம் என ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அருவி படத்தின் நாயகி அதிதி பாலன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளினி சித்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பல்வேறு துறை நிபுணர்கள் நடுவர்களாக கலந்துகொண்டு மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்தனர். டான்ஸ் மாஸ்டர்கள் நோபுள் மற்றும் ரவிவர்மா (குழு நடனம்), அபர்ணா மற்றும் பம்பா பாக்யா (சோலோ பாட்டு), டேவிட் பரத்(மெல்லிசை கச்சேரி), கார்த்திக்(ஒத்திசைந்து பாடுதல்), பாய்மத் குவங்(நடனப் போட்டி), திருச்சி சரவணகுமார் (வெரைட்டி ஷோ) ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இந்தோத்சவ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதி பாலன் பரிசுகளை வழங்கினார். இந்துஸ்தான் கல்லூரி இயக்குனர் சூசன் மார்த்தாண்டன், துணை இயக்குனர் பிலிப், முதல்வர் திருமகன், துணை முதல்வர் சாமுவேல் சம்பத்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.கல்லூரிகளுக்கு இடையிலான கலைநிகழ்ச்சி போட்டியின் ஒட்டுமொத்தப் பரிசை குருநானக் கல்லூரி தட்டிச்சென்றது. இரண்டாவது இடத்தை நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது.