ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எதிராக யாகூ சினிமா பைனான்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், முத்துராமலிங்கம் படக்குழு தங்களிடம் 28.55 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து 29 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு படத்தை திரையிடும்படி படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், முத்துராமலிங்கம் படம், திட்டமிட்டபடி பிப்ரவரி 24-ம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து, யாகூ சினிமா பைனான்ஸ் நிறுவனம் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், முத்துராமலிங்கம் படத்தை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.