சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டசபை வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில் கடந்த 18-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டதால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக சட்டசபையில் வலியுறுத்தியது. திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
இதனை எதிர்த்து சட்டசபைக்குள் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது சட்டசபை மார்ஷல்கள் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரிகள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கிழிக்கப்பட்ட சட்டையுடன் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார். பின்னர் சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி.ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வீடியோ காட்சிகளைத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இவ்வழக்கு விசாரணை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.