வாழ்க்கையின் பெரும்பாலான ஆச்சர்யங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தான் வரும். குறிப்பாக, சினிமாவில், சிவப்பு கம்பளங்கள் தன்னிச்சையாக விரிக்கப்படும். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் ஹரீஷ் கல்யாணுக்கும் ஒருவித வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்த ஹரீஷ் கல்யாண், தெலுங்கு சினிமாவிலும் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெர்சி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பெரும் அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
“இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கேட்டபோதே அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், ஆனால் இந்த அளவுக்கு மக்களை சென்று சேரும் என்று நினைக்கவில்லை. இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் எனக்கு ஃபோன் செய்து என்னை பாராட்டுவது தான். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஒவ்வொருவருக்கும், குறிப்பாக என் நண்பர் நானிக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் ஹரிஷ் கல்யாண்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படமான ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22, 2019 முதல் தொடங்குகிறது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலன் கோபாலன் தயாரிக்க, சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.