‘ஓ பெண்ணே ‘மியூசிக் ஆல்பத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடிக் கொடுத்த பாடல்

சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது  இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் மியூசிக் வீடியோ.திரைப்பட ஊடகத்திற்கான எந்த வரையறைகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாக உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள் மேலை நாடுகளில் புகழ் பெற்று விட்டன.  இம்முயற்சிகள் இங்கேயும் தொடங்கி ஒரு பக்கம் தொடர்ந்து வருகின்றன.

அப்படி ஒரு மியூசிக் ஆல்பமாக ‘ஓ பெண்ணே ‘ என்கிற பெயரில் ஒரு படைப்பு உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்திற்கு , ஏற்கெனவே சில இசை முயற்சிகள் மூலம் பெயர் பெற்றவரும் எழுமின், வேட்டை நாய் படங்களின் இசை அமைப்பாளருமான  கணேஷ் சந்திரசேகரன் வரிகள் எழுதி இசையமைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்னதாக தனுஷ், யோகி பி, அனிருத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.
மேலும் இசைத்துறை சார்ந்த திரையுலக முன்னணி இசைக்கலைஞர்களுடன் நட்புடன் இருப்பவர்.

கணேஷ் சந்திரசேகரன் இந்த ஆல்பத்திற்கான பாடலை எழுதியவுடன் வித்தியாசமான தென்றல் போல் வருடும் ஒரு இதமான குரல் வேண்டும் என்று நினைத்தபோது முதலில் அவர் மனதில்  வந்து நின்றவர் ஜி. வி. பிரகாஷ் குமார் குரல்தான். ஆனால் திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரிடம் கேட்டால் அவர் எப்படி இதை எடுத்துக் கொள்வாரோ என ஒரு வினாடி தயக்கம் இருந்தது. பிறகு தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்த போது அவர் உடனே சம்மதித்துள்ளார்.மறுநாளே பாடலாம் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியிருக்கிறார்.திடீர் சம்மதத்தில் உறைந்து போன கணேஷ் ,ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார்.அப்படி ஒரு வாரத்தில் ஒலிப்பதிவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் இசை பணிக்காக ஜெர்மன் சென்றிருந்த கணேஷ் பாடலை இணையத்தில் மூலம் அனுப்பி இருக்கிறார்.ஜி. வி. பிரகாஷ் குமார் உடனே பாடி அனுப்பி இருக்கிறார். திருத்தங்கள் வேண்டிய போது நேரில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கணேஷ் யோசித்துள்ளார். ஆனால் இந்த கொரோனா கால சமூக இடைவெளி இப்படி இணையத்தின் மூலம் பலரையும் இணைத்துள்ளதால் இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு திருத்தங்களைக் கூறிய போது அதையும் சரி செய்து ஜி.வி பிரகாஷ் குமார் அனுப்பியிருக்கிறார்.

இது பற்றி கணேஷ் சந்திரசேகரன் பேசும்போது,

“ஜி.வி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றவர்.இசைத் துறையில் பெரிய உயரங்களைத் தொட்டவர். மேலும் உயர்ந்து கொண்டிருப்பவர்.அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் அவரிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறிப் பாடிக் கேட்ட போது  அவரும் உடனே சம்மதித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நான் சொன்னதைப் புரிந்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நான் நினைத்த மாதிரி பாடி அனுப்பியது மேலும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா காலக்கட்ட இடைவெளிகள் எங்கிருந்தாலும் அனைவரையும் இணைக்கிறது என்பதை நினைத்து வியப்பாக இருந்தது.பாடலை எழுதிய நான் அவர் பாடிய பின், அவர் குரலில் கேட்டபோது, வரிகள் எழுதிய எனக்கே அந்தக் குரல் மூலம் இன்னொரு பரிமாணம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவரது அந்தக் குரல் இதயத்தின் ஆழத்தில் வருடும்படி இருந்தது. இது மனவலியை வெளிப்படுத்தும் படியான ஒரு சோகமான உணர்ச்சிகரமான பாடல்.அவரது குரல் மூலம் அந்தப் பாடலுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்து விட்டது” என்கிறார்.

இந்த மியூசிக் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் ஒத்த தாமரை பாடல் இயக்கிய டி. ஆர். பாலா. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார்.தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பத்தை சினிமா ராசா மற்றும் கேன்னி ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ளனர்.இந்த ஆல்பத்தில் நடிக்கும் நாயகன், நாயகிகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்”

இதுவரை இசையமைத்துள்ளவற்றில் இது ஒரு புதிய பரிமாணமாக, தனக்கு அமைந்துள்ளது என்று பெருமையுடன் கூறுகிறார் கணேஷ் சந்திரசேகரன்.