மீத்தேன் எடுக்க ஜி.வி.பிரகாஷ் கூறும் மாற்று வழி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே, நடிகர் கமல்ஹாசன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

அந்த வரிசையில் தற்போது ஜி.வி.பிரகாஷும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கமுடியுமா என்ன? ஆய்வுப்படி குப்பைக் கிடங்கு, இரசாயன ஆலை கழிவு, சாணம், விவசாயக் கழிவு, உலுத்துப் போன மரங்கள், ஈசல் புற்று, எறும்பு புற்று இவற்றின் மூலம் 85 சதவீதம் மீத்தேன் எடுக்கலாம். ஆனால் 12 விழுக்காடு மீத்தேன் தரும் விளைநிலங்களை குறிவைப்பது ஏன் எதற்காக? என்று கேள்வி கேட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே, தமிழகத்தில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.