பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரிப்பில், கே.பி. தனசேகர் இயக்கியுள்ள படம் குருமூர்த்தி.
காணாமல் போகும் 5 கோடி ரூபாய் பணப்பெட்டியைத் தேடிப் போலீஸ் துரத்தி ஓடுவதும் பெட்டி கைமாறிக் கைமாறி கண்ணாமூச்சி ஆடுவதும் தான் கதை.
ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் ஒரு பெரிய பெட்டியில் எடுத்துச் செல்கிறார்.ஐந்து கோடி என்கிற போது அது கறுப்புப் பணம் தானே? அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார். வாய்த்தகராறு முற்றி அங்கே சிறு பிரச்சினை வருகிறது.அந்தச் சலசலப்புக்குப் பின் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. பதற்றமடைகிறார் ராம்கி.
அதை ஒரு மூன்றுபேர் திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது. தேயிலைத் தோட்டத்தில் எங்கோ மறைத்து விடுகிறார்கள். பயத்தினால் ஒருவர் மறைத்து வைக்க ,வைத்த இடம் தெரியாமல் தவிக்க, அது இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது. ராம்கி போலீசில் புகார் செய்கிறார். இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீஸ் படையும் தேடுகிறது. பணப்பெட்டி யாரிடம் சென்றது? மாறிமாறிக் கடைசியில் யாரிடம் போய்ச் சேருகிறது என்பதுதான் கதை செல்லும் பயணம். இதற்கிடையில் காவல் துறை அதிகாரியான நட்டியின் குடும்பக் கதை இணைந்து கொள்கிறது.
பிரசவ வலியில் துடிக்கும் மனைவி, உடன் இருக்க முடியாமல் தன் மன நெருக்கடியை மறைத்துக் கொண்டு கடமையையே கண்ணாக எண்ணிப் பெட்டியைத் தேடும் நட்டி என சென்டிமெண்ட் கலந்து கொள்ளும் போலீஸ் விசாரணைக் கதையாக நகர்கிறது.
குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோலில் நட்டி நடித்துள்ளார். பூனம் பாஜ்வா பிரதான நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி மறு பிரவேசம் செய்துள்ளார்.
இப்படத்தில் ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா
மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார் எஸ். என். பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் நடராஜ் என்கிற நட்டி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர்
நடிகரான பிறகு சில வித்தியாசமான படங்களில் நடித்துப் பெயர் பெற்றார் . நடித்ததில் வேறு சில படங்கள் மசாலாவாகவும் அமைந்தன. இதில்
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அவர், பெரும்பாலும் ஜீப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது வீட்டுடன் தொடர்பு கொண்டு செல்போனில் பேசுகிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதற்கு அவரது உயரம் கை கொடுக்கிறது. தன்னால் முடிந்த வகையில் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து மேலும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வரலாம். அவரது குணசித்திரம் மேலும் சித்தரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
தமிழரசி என்கிற பெயரில் நாயகியாக வருகிற பூனம் பாஜ்வா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்துள்ளார். பழைய மலர்ச்சியை முகத்தில் காணவில்லை. தோற்றத்தில் சற்று மாற்றம் தெரிந்தாலும் குறை வைக்காத நடிப்பை வழங்கி உள்ளார். பாடல் காட்சிகளில் அழகாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டித் தாராளமாக மனம் காட்டியுள்ளார். மருத்துவமனையில் பிரசவ வலியில் கணவனைப் பார்க்கத் துடிக்கும் காட்சிகளிலும் பூனம் காட்டியுள்ளது நல்ல நடிப்பு.
போலீஸ் டிரைவராக ரவிமரியா வருகிறார் . உடன் பயணிக்கும் ஏட்டாக மனோபாலா வருகிறார். இவர்களுக்குள் நடக்கும் அசட்டுத்தனமான பேச்சு வழியாகச் சிரிப்பூட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரிதாக சிரிப்பு வரவில்லை.
ரவி மரியா, மனோபாலா இருவரும் மாமன் மச்சான் பேச்சு பேசுகின்றனர். அதுவும் அந்த யானை லத்தி காமெடி சகிக்க முடியாத கற்பனை.
மனோ பாலாவை ரவிமரியா உருவக்கேலி செய்யும் காமெடி அபத்தம்.
சற்று இடைவெளிக்குப் பின் ராம்கி நடித்துள்ளார். அவர் கந்தசாமி என்கிற பாத்திரத்தில் வருகிறார்.90களில் பார்த்த அதே தோற்றம். பெரிதாக அவர் பயன்படுத்தப்படவில்லை. அவரது பிளாஷ்பேக் காட்சிகள் கதையில் ஒரு சிறு ஆச்சரியம் வர உதவி இருக்கின்றன.
நட்டியுடன் பூனம் பாஜ்வா தோன்றும் பாடல் காட்சிகள் நல்ல ஒளிப்பதிவுக்கான தரத்திலும் தொழில்நுட்ப நேர்த்தியிலும் அழகாக அமைந்துள்ளன.
ஆனால் அதே நேர்த்தி பிற காட்சிகளில் இல்லை.பட்ஜெட்டின் போதாமையோ? எனவே அந்தப் பாடல் காட்சி கதையில் ஒட்டாமல் நிற்கிறது;
அதே போல் மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சிரிப்பூட்டுகிறார். அவருடன் சஞ்சனா சிங் , அஸ்மிதா தோன்றும் ‘செக்கசெவந்த சுந்தரி
சேரநாட்டு முந்திரி’ பாடல் மசாலா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து. எண்பதுகளில் பார்த்த கிளுகிளு மசாலா போல் இருக்கிறது.
குடுகுடுப்பைக்காரராக வருகிறார் ஜார்ஜ் . ஆனால் அவர் வருவதும் பேசுவதும் மிகைநடிப்பு.
படத்தின் பெரும் பகுதி மலைப்பாங்கான தேயிலைத்தோட்டமுள்ள பகுதிகளில் நடக்கிறது. அதனால்
பசுமையான மலைச்சரிவு பின்புலக் காட்சிகள் பார்ப்பதற்கு இதமாக, கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன.
படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ‘தாரகையே தாயும் நீயே’ பாடல் தனியே கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையாக உள்ளது.ஒரு திரைப்படத்தில்
பாடல்கள் நன்றாக இருந்தாலும் அதன் அமைவிடத்தின் மூலம் தான் ரசிக்கப்படும்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள தேவராஜ் ஒளிப்பதிவில் ஒரே சீரான தன்மையைப் படத்தில் கடைப்பிடிக்கவில்லை. காரணம் அவர் என்ன செய்வார்?பட்ஜெட்டின் நெருக்குதல் காரணமாக இருந்திருக்கலாம்.
இனிமையான பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் சத்யதேவ் உதய சங்கர், பின்னணி இசையில் சுமார் ரகம் என்றுதான் கூற வைக்கிறார்.
ஓர் எளிமையான திருடன் போலீஸ் மசாலா படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். கால மாற்றத்தில் சினிமா அடைந்திருக்கும் வளர்ச்சியை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் படம் ‘குருமூர்த்தி’ பட்ஜெட் மசாலா படம்.