சென்னையில் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி.மேல்நிலைப்பள்ளி, அரசு காயிதே மில்லத் கல்லூரி உள்பட 259 மையங்களில் தேர்வு நடந்தது. இத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினர். 25 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதிய சிலர் கூறுகையில், “தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. மொழித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் இருந்தது. மொழித்தேர்வில் பலரும் தமிழை தேர்ந்து எடுத்திருந்தனர். தமிழில் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் பொது அறிவில் உள்ள கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன” என்று தெரிவித்தனர்.
இந்த தேர்வில் பொது அறிவு கேள்வி பகுதியில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன.குறிப்பாக, மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டா? என்று கேட்கப்பட்டு அதற்கான விடைகளாக 1.ஆம், 2. இல்லை, 3.பரிந்துரைக்க மட்டுமே முடியும், 4. ஜனாதிபதியால் மட்டுமே கலைக்க முடியும் என 4 விதமான பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.