கோலி சோடா 2 விமர்சனம்

வடசென்னையில் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார் சமுத்திரகனி. இவருக்கு ரவுடிகளிடம் வேலை பார்த்து வரும் பரத் சீனியும், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டு, கூடைப்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருக்கும் இசக்கி பரத்தும், ஆட்டோ ஓட்டி,  கார் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கும் வினோத்தும், தனித்தனியாக பழக்கமாகிறார்கள். 

அதே பகுதியில் இருக்கும் சுபிக்‌ஷாவை காதலிக்கிறார் பரத் சீனி. சுபிக்‌ஷாவின் அம்மா ரோகினிக்கு இவர்களின் காதல் தெரிய வர, ரவுடியிடம் வேலை செய்வதை விட்டு விட்டு வேறு நல்ல வேலைக்கு போக சொல்கிறார். பரத் சீனியும் அத்தொழிலை விட்டு நல்ல வேலை தேடி வருகிறார். ஒரு சமயத்தில் மீண்டும் ரவுடியுடன் இணையும் நிலை உருவாகிறது.

கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி அடைந்தால் நல்ல வேலைக்கு போகலாம் என்று தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார் இசக்கி பரத். இவர் கிரிஷா குரூப்பை காதலிக்கிறார். இந்த காதல் விவகாரம் தெரிந்த ஜாதி தலைவர் கிரிஷா குரூப்பை அடித்து விடுகிறார். அவர் மீது புகார் கொடுக்க செல்லும் கிரிஷா குரூப்க்கும், இசக்கி பரத்க்கும் போலீஸ் திருமணம் செய்து வைக்கிறார்கள். பிறகு இசக்கி பரத்தை அடித்து போட்டு விட்டு, கிரிஷா குரூப்பை அழைத்து சென்று விடுகிறார் ஜாதி தலைவர்.

ஆட்டோ ஓட்டி வரும் வினோத், கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவுன்சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடுகிறார். இம்மூன்று பேரும் ஒவ்வொரு பிரச்சனையில் சிக்குகிறார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை எப்படி வென்றார்கள்? சமுத்திரகனி இவர்களுக்கு எப்படி உதவி செய்தார்? அவர்களின் காதல் கைகூடியதா? என்பது கோலிசோடா 2 படத்தின் மீதிக்கதை.
பரத் சீனி, இசக்கி பரத், வினோத், மூன்று  பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கார்கள். சுபிக்‌ஷா மொபைலில் வரும் ரிங்க்டோன் போலவே நடித்துள்ளார். கிரிஷா குரூப்பும் சிறப்பாக நடித்துள்ளார்.  படத்திற்கு சமுத்திரக்கனியின் நடிப்பு கூடுதல் பலம். விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் பாடல்களும், பின்னணி இசையையும் சிறப்பு. 
‘கோலி சோடா 2’  சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு குளிரிச்சியான சோடா