கையில் ஏற்படும் காயங்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் புதிய கிளினிக்: கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் திறப்பு
- மிகவும்சிக்கலான பிரச்சினைகளுக்கு நுண் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கும் 9 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் செயல்படுகிறது
- கை காயங்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்த விழிப்புணர்வையும் மேற்கொள்கிறது
சென்னை, மார்ச் 6– 2023 :சென்னை அடையாறில் உள்ள கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி கிளினிக் வளாகத்தில் கையில் ஏற்படும் காயங்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க புதிய கிளினிக்கை திறந்துள்ளது. இம்மருத்துவமனையின் பிளாஸ்டிக், அழகியல் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் கையில் ஏற்படும் காயங்கள் தொடர்பாக அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த புதிய கிளினிக்கை இம்மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைத்துறை டீன் டாக்டர் எஸ். செல்வ சீதாராமன் மற்றும் இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் ஆகியோர் முன்னிலையில் தாம்பரம் மெப்ஸ்–எஸ்இஇசட் மேம்பாட்டு ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் திறந்து வைத்தார்.
இந்த கிளினிக் வாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் செயல்படும். இதில் திறமைமிக்க பிளாஸ்டிக், கை மற்றும் மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் உயர்நிலை நவீன ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப நுண்ணோக்கிகள் உள்ளது. இதன் காரணமாக கையில் ஏற்படும் எந்தவிதமான சிக்கலான காயங்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். இவை தவிர, முழுமையான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சை அளிக்கும் விதமாக 9 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவும் உள்ளது. அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த கிளினிக்கில் முழுவதும் துண்டான விரல்கள், கட்டைவிரல் மற்றும் கைகளை ஒன்று சேர்த்து சிகிச்சை அளித்தல், விரல்களில் ஏற்படும் காயங்கள், நகங்களில் ஏற்படும் பிரச்சினைகள், கை மற்றும் மணிக்கட்டுகளில் ஏற்படும் எலும்பு முறிவுகள், கைகளில் ஏற்படும் தீக்காயம், கைகளில் ஏற்படும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தசைநார் காயங்கள், எந்திரங்களால் கைகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முன்கையில் ஏற்படும் வெட்டு காயங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கைகளைப் பொறுத்தவரை மிகவும் சிக்கலான தசை நாண்கள், நரம்புகள், தசைநார்கள், ரத்த நாளங்கள் மற்றும் எலும்புகள் உள்ளிட்ட பல கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கையில் ஏற்படும் எந்த ஒரு காயமும் இந்த கட்டமைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பை ஏற்படுத்துபவயாக இருக்கலாம். ஒரு சிறிய வெட்டு காயம்கூட இதன் முக்கிய கட்டமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது குறித்து கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறுகையில், எங்கள் மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் கை சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இங்கு கைகளில் உள்ள தசைநார் பிரச்சினைகள், நரம்பு சம்பந்தமான காயங்கள், எலும்பு முறிவுகள், எலும்பு இடப்பெயர்வுகள், கைகள் துண்டாதல், விரல் சம்பந்தமான பிரச்சினைகள், முடக்கு வாதம் மற்றும் கை மூட்டுகளில் வலி மற்றும் பிற மூட்டுவலிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் அனைத்தும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கையில் ஏற்படும் காயங்களை முறையாக கண்டறிந்து அதற்கு சரியான சிகிச்சை அளிக்காத நிலையில் அது குறுகிய மற்றும் நீண்ட கால பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் அது ஒருவரை ஊனமுற்றவராகக்கூட மாற்றிவிடலாம். எனவே கைகளில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும். பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அது குறித்து கை அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய கிளினிக் குறித்து
இம்மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைத்துறை டீன் டாக்டர் எஸ். செல்வ சீதாராமன் கூறுகையில், இந்த கிளினிக்கில் 9 பேர் கொண்ட சிறப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு 24 மணி நேரமும் செயல்படும். உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள ஊழியர்கள் அதிக அளவில் கை சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். சிறு தொழிற்சாலைகளுக்கு கைகளில் ஏற்படும் காயங்கள் தொடர்பாக அதிக விழிப்புணர்வு இல்லை. ஒருவருக்கு கைகளில் ஏற்படும் காயங்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கும்போது அந்த பிரச்சினையில் இருந்து அவர் விடுபட முடியும். இல்லை எனில் அது அவருக்கு ஊனத்தைக்கூட ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கைகளில் காயம் ஏற்படுபவர்களில் 20 சதவீதம் பேர் நிரந்தர இயலாமைக்கு சென்றுவிடுவதாக தெரிய வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படாமையும் ஆகும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரை முக்கிய தொழில் பகுதிகளாக இருப்பதோடு, அதிக மக்கள் வாழும் பகுதியாக இருப்பதால் கை சம்பந்தமாக பலருக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்களுக்கு கை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதன் ஒரு முயற்சியாக நகரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒவ்வொரு மாதமும் சென்று கைக் காயங்கள் குறித்தும், காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்பது குறித்தும் விளக்கிக் கூற இருக்கிறோம். ஏனெனில் மிகவும் உணர்திறன் வாய்ந்த நரம்புகள், தசைநாண்கள் மற்றும் செல்கள் சரியாகக் கையாளப்படாவிட்டால் அவை சேதமடையக்கூடும். மேலும் இது பற்றிய துண்டு பிரசுரங்களையும் அவர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றும் டாக்டர் செல்வ சீதாராமன் கூறினார்.