இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடரும் -அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களைச் சுற்றியுள்ள சில விவசாய நிலங்களில், மின் அளவீட்டைக் கணக்கிட தமிழக அரசு சார்பில் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விவசாயமே கேள்விக்குறியாக உள்ள நிலையில் தற்போது இலவச மின்சாரம் ரத்தாகுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட உதய் மின் திட்டத்தில் தமிழ்நாடு இணைந்ததால் மின் இழப்பீட்டை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.  தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் அரசின் இலவச மின்சார இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு 2000 கோடி வரை மின்சார வாரியத்திற்கு செலுத்துகிறது. 

இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், ” எந்த நிலைமையிலும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. மின் அளவீட்டை கணக்கிடவே சில இடங்களில் மீட்டர் பொருத்தப்படுகிறது. எனவே பம்பு செட்டுகளில் மீட்டர் பொருத்துவதால் விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை” என தெரிவித்துள்ளார். இருந்தாலும் அப்பகுதி விவசாயிகள் ஒரு வித அச்சத்துடனேயே உள்ளனர்.