“சென்னையில் ஒரு ஆண்டுக்குள் முதியோர்கள் மத்தியில் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கின்ற கண்புரை பாதிப்புகள்: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தகவல்

• கோவிட் தொற்றுப்பரவல் ஆண்டுகளின்போது கண்புரை நோய்க்கு (கேட்டராக்ட்) பரிசோதனை மற்றும் சிகிச்சையில் தாமதங்கள், மருத்துவமனைகளில் கண் பராமரிப்பு சேவைகள் மற்றும் கண்புரை அறுவைசிகிச்சைகள் மேற்கொள்வதில் இடையூறுகள் ஆகியவற்றோடு கட்டுப்படுத்தப்படாத இரத்தஅழுத்தம், மிகை இரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவை, கண்புரை நோய்கள் பன்மடங்கு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

சென்னை, 24 ஜுன் 2022: “கடந்த ஒரு ஆண்டு காலஅளவின்போது இம்மாநகரில் கண்புரை பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை, குறிப்பாக 50-70 ஆண்டுகள் வயது பிரிவில் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகை தருகின்ற ஒவ்வொரு 100 வெளி நோயாளிகளிலும் 40-60 நபர்களுக்கு கண்புரை பாதிப்பு நிலைகள் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு இறுதி-நிலை (முற்றிய) கண்புரை பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. கோவிட் தொற்று பரவலுக்கு முந்தைய ஆண்டுகளின்போது இந்த எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு 100 வெளிநோயாளிகளில் வெறும் 10 நபர்கள் என்ற அளவிலேயே இருந்தது,” என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான டாக்டர். ஶ்ரீனிவாசன் ஜி. ராவ் கூறினார்.

ஜுன் மாதம், கண்புரை விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவதையொட்டி நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர். ஸ்ரீனிவாசன், “கோவிட் தொற்றுப்பரவல் ஆண்டுகளின்போது, இத்தொற்றால் அதிக பாதிப்பிற்கு ஆளாகும் நிலையிலிருந்த முதியோர்கள் கண் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். அரசு நடத்தும் மருத்துவமனைகள் உட்பட, பெரும்பாலான மருத்துவமனைகள் அக்காலத்தின்போது மூடப்பட்டுவிட்டன அல்லது கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவிட்டன. கண் பரிசோதனைகள் மற்றும் அறுவைசிகிச்சைகள் செய்யப்படுவதை இது தள்ளிப்போட்டது. கோவிட் தொற்று காலத்தில் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, மிகை இரத்தஅழுத்தம், இரத்தஅழுத்தம், மற்றும் பிற நாட்பட்ட உடல்நல பிரச்சனைகளும் அதிகரித்தன. கண்புரை நோய்க்கு முக்கியமான இடர்காரணிகளாக இவைகள் தான் இருக்கின்றன. கண்புரை நோய் பாதிப்பு நேர்வுகள் அச்சுறுத்தும் அளவிற்கு அதிகரித்திருப்பதற்கான காரணங்களாக இந்த நிகழ்வுகளை கூறமுடியும்,” என்று கூறினார்.

இந்தியாவில் சுமார் 40-60% பார்வைத்திறன் இழப்புகள் கண்புரை நோயால் ஏற்படுகின்றன. பார்வைத்திறன் இழப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி இந்தியாவில் ஏறக்குறைய 8.25 மில்லியன் நபர்கள் கண்புரை பாதிப்புடன் இருக்கின்றனர். எனினும், கண் மருத்துவமனைகள் மற்றும் நிபுணர்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் நம் நாட்டில் 1.5 முதல் 2 மில்லியன் என்ற அளவிலேயே கண்புரை அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த பின்தங்கிய நிலையை சரிசெய்வதற்கு 5-6 மில்லியன் கண்புரை அறுவைசிகிச்சைகள் செய்யப்படுவது நமது இந்திய நாட்டிற்கு அவசியமாக இருக்கிறது.

ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான அவசியத்தை சுட்டிக்காட்டிய டாக்டர். ஸ்ரீனிவாசன், கண்ணுக்கு உட்புறத்திலான அழுத்தத்தைப் பரிசோதிக்க கண் பரிசோதனைகளை 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் செய்துகொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். அதைப்போலவே, 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கண்புரை பாதிப்பிருக்கிறதா என்று அறிய ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பார்வைக்கூர்மை பரிசோதனை, சிறுபிளவு விளக்கு பரிசோதனை, வண்ணப்பார்வைத்திறன் பரிசோதனை, எதிரிடை நிற பரிசோதனை, விழிப்பாவை விரிவு மதிப்பீடு மற்றும் விழித்திரை மதிப்பீடு ஆகியவை மேற்கொள்ளப்படுவதற்கு பரிந்துரைக்கப்படும் சோதனைகளுள் உள்ளடங்கும்.

நிரந்தர பார்வைத்திறன் இழப்பிற்கு கண்புரை வழிவகுக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். எனினும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளித்தால், கண்புரையால் ஏற்பட்ட பார்வையிழப்பை முற்றிலுமாக சரிசெய்துவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார். கண்புரை அறுவைசிகிச்சைகள், அனைத்து பருவங்களிலும் செய்யப்படுவதற்கு பாதுகாப்பானவை. ஆரம்ப நிலையிலேயே அறுவைசிகிச்சை செய்யப்படுமானால், பார்வையை திரும்பப்பெறுவதற்கான வாய்ப்பும் சிறப்பாக இருக்கும். கண்புரைக்கு சிகிச்சையளிக்க உள்கண்வில்லை பதியத்துடன் கட்புரை – பால்மமாதல் என்பதே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. இருந்தபோதிலும், கண்புரை வளர்ந்து முற்றிய நிலையில் இருக்குமானால், சிறிய கீறலுடன் செய்யப்படும் கண்புரை அறுவைசிகிச்சை அல்லது கண்புரை அகற்றல் மற்றும் தையல் போடுவது அவசியமாக இருக்கும். அறுவைசிகிச்சை அரங்கை தொற்றுகளின்றி முழுமையாக தூய்மையாக்குவதற்கான சிறந்த நெறிமுறைகள் பின்பற்றப்படுவது அதிகரித்திருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் கண்புரை அறுவைசிகிச்சையின் பாதுகாப்புத்தன்மை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது மற்றும் உள்கண்வில்லைகளில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்கள் பார்வைத்திறன் சௌகரியத்தையும் மற்றும் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சைப் பலனையும் மேலும் அதிகரித்திருக்கின்றன என்று டாக்டர். ஸ்ரீனிவாசன் மேலும் விளக்கமளித்தார்.

இடர்காரணிகள் மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேசிய டாக்டர். ஸ்ரீனிவாசன், “கண்புரை என்பது, கண்வில்லைகளை மறைத்து பார்வையை மங்கலாக்குவதை குறிக்கிறது. எந்தவொரு நபருக்கும் கண்புரை பாதிப்பு ஏற்படலாம் என்ற போதிலும், வயதுவந்த நபர்கள் மற்றும் முதியோர்களுக்குத்தான் கண்புரை பாதிப்பு பொதுவாக நிகழ்கிறது. குறிப்பிட்ட சில மரபணு நிலைகள், நீரிழிவு, மிகை இரத்தஅழுத்தம், விபத்தில் சிக்கியவர்கள், சூரியவெளிச்சம் மற்றும் புறஊதாக்கதிர்களுக்கு அதிகம் வெளிப்படக்கூடிய நபர்கள், உடல்பருமனுள்ள நபர்கள், புகை பிடிப்பவர்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் செலுத்தப்பட்டவர்கள் ஆகியோர் கண்புரை பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கின்றனர். வைட்டமின் சி மற்றும் இ ஆகியவற்றை அதிகமாக உள்ளடக்கிய உணவுகளை உட்கொள்வது, ஊறஊதாக்கதிர்களுக்கு வெளிப்படுவதை தடுக்க குளிர் கண்ணாடிகளை அணிவது, நீரிழிவு மற்றும் பிற வாழ்க்கைமுறை நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும். ஆரஞ்சு வகை பழங்கள், தக்காளிப்பழங்கள், சிவப்பு மற்றும் பச்சை மிளகு, ஸ்ட்ராபெர்ரிஸ், உருளைக்கிழங்குகள், கிவி, புரோகோலி, பருப்பு வகைகள் மற்றும் பாதாம் பருப்புகள் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாகும். புகை பிடிப்பதை கைவிடுவது மற்றும் மதுபான நுகர்வை குறைத்துக்கொள்வதும் கண்புரை பாதிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளாக இருக்கின்றன,” என்று கூறினார்.