ஃபெப்சி தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ரஜினிகாந்தின் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 30க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக குறைத்ததாக குற்றஞ்சாட்டிய ஆர்.கே.செல்வமணி, பிரச்சனைக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்கெனவே பேசி முடித்தபடி ஊதியம் வழங்காவிட்டால், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு பணிகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று முன் தினம் அறிவித்தார்.
இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி அறிவித்தபடி, ஃபெப்சி தொழிலாளர்கள் யாரும் இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இதனால், சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற இருந்த ரஜினிகாந்தின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.