கண்ணைக் கவரும் வண்ண உடைகளுடன் நாய், கிளி, மீன் மற்றும் பசுக்கள் கலந்து கொண்டு அசத்திய, சென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது

 
வீடற்ற தெரு விலங்குகள் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கில் ‘பீப்பிள் ஃபார் அனிமல்’ உள்ளிட்ட அமைப்பினரால், சென்னையின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்ட ‘சென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020’ என ஹோட்டல் சவேராவில் நடத்தப்பட்டது. 
 
முழுவதுமாக செல்லப் பிராணிகள் மற்றும் அவைகளின் உரிமையாளர்களை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஃபேஷன் ஷோவில் நாய்கள், கிளிகள், மீன்கள் மற்றும் பசுக்கள் உள்ளிட்டவை கலந்துகொண்டன. செல்லப்பிராணிகளுக்கான ஆடைகளை சென்னையின் புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களான *சிட்னி ஸ்லேடன், டினா வின்சென்ட், ரிச்சா கோயிங்கா, சைதன்யா ராவ், நவோமி, விபா, தீபிகா* மற்றும் *வாலன்டி* ஆகியோர் வடிவமைத்திருந்தனர். அவர்களது கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்தி மிடுக்கான தோற்றத்தில், போட்டியில் பங்கேற்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், தங்களது செல்லப்பிராணிகளுடன் ரேம்ப் வாக் சென்றனர். 8 சுற்றுகளில் இப்போட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களும், பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும், Duchess friends of Furries குழுவின் நிறுவனர் *நினா ரெட்டி* தனது சிம்பா மற்றும் ஜூனியருடன் ரேம்ப் வாக்கில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் *5 லட்சத்திற்கான காசோலை* யையும் பீப்பிள் ஃபார் அனிமல் அமைப்பிற்கு வழங்கினார்.
 
அதேபோல போட்டியாளர்கள் 5ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக அளித்தனர். மேலும், முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக புகழ்பெற்ற போட்டியாளருக்கான போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தெருவில் இருக்கும் விலங்குகளுக்கு உதவி செய்த டாக்டர்களான பிரியா, நாகராஜன், தணிகைவேல், அருண் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் விலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஆதித்ய வெங்கட்ராமன், மாலினி, ஜெயஸ்ரீ ரமேஷ் மற்றும் அனுராதா ராஜ்குமார் ஆகியோருக்கும் விருது அளிக்கப்பட்டது. 
 
மேலும், இந்த ஃபேஷன் ஷோ மூலமாகப் பெறப்பட்டும் நிதியானது, பீப்பிள் ஃபார் அனிமல் அமைப்பு மட்டுமின்றி, ஆத்விகா பவுண்டேசன், கேட்டிடூட், கிளௌடு 9, பைரவா பவுண்டேசன் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.