தமிழகத்தில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பயிர்காப்பீட்டு தொகையினை வழங்கவில்லை, உடனடியாக வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தூத்துக்குடிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, கருப்புக்கொடி காட்ட முயன்றனர். மேலும் அவரிடம் மனுவும் அளித்தனர். ஆனால் இதுவரை பயீர்காப்பீடு செய் தொகையினை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பயர் காப்பீட்டு தொகை வழங்கமால் இருக்கும் தமிழக அரசு பதவி விலக கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் நான்குவழிச்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மாநில அமைப்பாளர் காளிராஜ், மாவட்ட தலைவர் ஜெயக்கண்ணன், பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன், மாவட்ட விவசாயி அணி தலைவர் சீத்தராமன் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.