பரப்பன அக்ரஹாரா சிறை சசிகலாவுக்காக ரெடியாகிறது

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச் சாலையில் அடைக்கப்பட உள்ள சசிகலாவுக்கு சிறைக்குள் தேவைப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை காரில் புறப்பட்டார். மாலை 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார். கூடுதல் நகர உரிமையியல் அமர்வு முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானதும், அவர்கள் மூவரும் தெற்கு பெங்களூரிலுள்ள (ஒசூர் ரோடு அருகே) பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவர். இங்குதான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு பிறகு 21 நாட்கள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையில் பெண்கள் பிரிவில் சசிகலா மற்றும் இளவரசியும், ஆண்களுக்கான பிரிவில் சுதாகரனும் அடைக்கப்டுவார்கள். இதுகுறித்து ‘ஒன்இந்தியா தமிழிடம்’ பேசிய சிறை அதிகாரி ஒருவர் கூறியது: சசிகலா மற்றும் இளவரசிக்கு, தலா 3 நீல சேலைகள் வழங்கப்படும். 1 தட்டு, 1 சொம்பு ஆகியவையும் வழங்கப்படும். இதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

சாப்பாடு நேரம்

பரப்பன அக்ரஹாரா சிறை விதிமுறைப்படி, காலை 6.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும். காலை 11.30 மணிக்கு மதிய சாப்பாடு வழங்கப்படும். மாலை 4 மணிக்கு, டீ அல்லது காபி வழங்கப்படும். மாலை 6.30 மணிக்கு இரவு சாப்பாடு வழங்கப்படும். தாமதமாக வந்தால் சாப்பாடு கிடைக்காது. தேவையெனில், சாப்பாட்டை வாங்கி வைத்துக்கொண்டு தாமதமாக சாப்பிடலாம்.

சிறப்பு சலுகை இல்லை

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவிக்காக சிறைக்குள் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படமாட்டாது. தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை ஆகியவையும் பிற கைதிகளை போலவே இவர்களுக்கும் வழங்கப்படும். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து கோர்ட் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்து உத்தரவிட்டால் மட்டுமே சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். வீட்டு சாப்பாடு போன்றவைதான் அந்த சிறப்பு சலுகைகள்.

மூன்று வேலைகள்

பெண்கள் செய்யக்கூடிய வகையில் ஊதுபத்தி உருட்டுவது உட்பட 3 வகை வேலைகள் மாறி மாறி சசிகலா மற்றும் இளவரசிக்கு ஒதுக்கப்படும். இதற்கான தினசரி கூலி 50 ரூபாயாகும். முன்பு இக்கூலி ரூ.35 என்ற நிலையில் இருந்தது. சமீபத்தில் அது 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. வாரத்திற்கு ஒரு நாள் வீக்-ஆஃப் கொடுக்கப்படும்.

பணம் தரப்படமாட்டது

சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குள் செய்யும் வேலைக்காக, மாதந்தோறும், பணம் தரப்படாது. பதிலாக கூப்பன் கொடுப்பார்கள். அதை வைத்து சிறைக்குள் உள்ள கடையில், பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் வாங்கிக்கொள்ள முடியும். சிறை தண்டனை காலம் முடிவடைந்த பிறகு செய்த வேலைக்கு கூலி கொடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.