வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது,
ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் கற்பது தான். அதேபோல், ஒவ்வொரு இசையும் தியானம் தான். இசையைப் பொறுத்தவரை அந்தந்த தருணத்தில் உருவாவது தான்.
இந்த படம் இரண்டு தந்தைகளைப் பற்றிய கதை.
காக்கா முட்டை, விசாரணை, வெயில் அதேபோல், கலைநயமிக்க இசையமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த படம் தான் கருமேகங்கள் கலைகின்றன. ஆகையால் தான் சம்பளத்தைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. கையிலே ஆகாசம் பாடலை இறுதியாகத்தான் சுதாவிடம் கூறினேன். அதேபோல், இயக்குநர்கள் அந்த நம்பிக்கையை கொடுக்கும்போது நிறைய படைப்பு உருவாகும். அதுபோல், தங்கர் பச்சான் சாரும் என்மீது நம்பிக்கை வைத்தார். தங்கர் பச்சான் சார், பாலா சார் போன்றோர்கள் உணர்வுபூர்வமாகத்தான் இசை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்த டியூன் கிடைத்து விட்டால் திருப்தியாக இருக்கும். எனக்கு எப்போதுமே மக்களின் உணர்வுகளை மையப்படுத்தப்படும் படம் தான் மிகவும் பிடிக்கும். இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
இசையமைப்பாளராக என்னை உணர்வுகளோடு அழைத்து செல்ல வேண்டும். மேலும், ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து தான் இசையமைத்து வருகிறேன்.
எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போன்ற அனைவரின் இசையைக் கேட்டு அதிலிருந்து தான் என்னுடைய இசையை அமைத்து வருகிறேன்.. என்றார்.
அதன் பிறகு..
கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மேடையில் அவரே இசையமைத்து பாடினார். எம்.எஸ்.வி. சாருக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன் என்றார்.
இயக்குநர் வெற்றி மாறனுக்கு, எள்ளு வய பூக்கலையே….
இயக்குநர் செல்வராகவனுக்கு, உனக்கென மட்டும் வாழும் இதயமடி….
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு, கண்ணாளனே எனது கண்ணை…..
இசைஞானி இளையராஜாவிற்கு, நினைவோ ஒரு பறவை…..
நடிகர் விக்ரமிற்கு, தெய்வத்திருமகள் படத்தில் வரும் பின்னணி இசை….
இயக்குநர் தங்கர் பச்சானுக்கு, ஒளியிலே தெரிவது தேவதையா….
மேற்கண்டவர்களுக்கு என்ன பாடலை அர்ப்பணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, இந்த பாடலை அர்பணிப்பேன் என்று பாடி, இசையமைத்தார்.
தங்கர் பச்சான் ‘இசை இளவரசன்’ என்று என்னை குறிப்பிட்டிருக்கிறார், அவருக்கு நன்றி என்றார்.
ஜி.வி.பிரகாசுக்கு அவர் உருவப்படம் பொறித்த புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்து விட்டு
தங்கர் பச்சான் பேசியதாவது..
இசை இல்லையென்றால் இன்று பாதி பேருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். இசையமைப்பாளர்கள் எல்லோரும் வைத்தியம் பார்ப்பவர்கள். மிக கடினமான சூழலை நான் சுலபமாக கூறிவிட்டேன். ஆனால், இந்த தலைமுறையும் ரசிக்கும்படி ஜி.வி.இசையமைத்திருக்கிறார். அவருக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் ஏதாவது செய்வேன். இது வெறும் இசை வெளியிடும் நிகழ்ச்சி மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கு மிகப் பெரிய சொத்தை விட்டு போகிறோம் என்றார்.