கடந்த மாதம் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. தொழிற்பாடப்பிரிவினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கலந்தாய்வு நிறைவடைந்ததை தொடர்ந்து, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கியது. இன்றுடன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவடைய உள்ளது.
தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக கடந்த சில ஆண்டுகளாவே பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கலந்தாய்விலும் அது நன்றாகவே தெரிந்தது. கலந்தாய்வின் 19வது நாளான நேற்று சுமார் 7,508 பேருக்கு கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 3,024 பேர் கலந்தாய்வில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மொத்தமாக 19 நாட்களின் முடிவில் 83,562 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 46,818 பேர் கலந்தாய்வில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு கலந்தாய்வில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பே அதிக அளவு மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 38,353 பேர் இதனை தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கும் இசிஇ படிப்பை 33,900 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். 91,894 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளன. அரசு கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்ட நிலையில் தனியார் கல்லூரிகளில் 50% இடம் கூட நிரம்பாமல் உள்ளது.