மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள “என் காதலே”

Sky wanders Entertainment என்ற பட நிறுவனம் சார்பில், இயக்குநர் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் ” என் காதலே “.  மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்,  “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்நிகழ்வினில்..  

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் கௌதம் ராஜ் பேசியதாவது…

 

இப்படக்குழுவினுக்கு என் வாழ்த்துக்கள். முக்கியமாக இரண்டு பேருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். நடிகர் லிங்கேஷ் பவர்புல்லான ஆக்டர், மிகத்திறமையானவர். சினிமாவில் நல்ல திறமை இருந்தும் அது வெளிப்படாமலே பலர் காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் இவர் தொடர்ச்சியாக தனக்கான இடத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். நண்பர் டோனி. நானும் அவரும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தோம். அவன்  மிகப்பெரிய கேமராமேன் ஆக வேண்டியவன், அவனுக்கு தெரியாதது ஏதும் இல்லை. அவனுக்கும் என் வாழ்த்துக்கள். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ராமு செல்லப்பா பேசியதாவது… 

இந்தப்படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் சாண்டி நண்பர், மிகத் திறமையானவர்,  ஒரே இரவில் எனக்காக ஒரு பாட்டு போட்டுத் தந்தார். நடிகர் லிங்கேஷை டாணாக்காரன் வேலை செய்யும் போது, அவரைப் பார்த்துள்ளேன், அவ்வளவு அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார். அவர் கூட சீக்கிரம் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் நன்றி.நாயகன் லிங்கேஷ் பேசியதாவது…

சின்னப்படங்கள், பெரிய படங்கள் என இல்லாமல் அனைத்துப்படங்களுக்கும் ஆதரவு தரும் பத்திரிக்கையாளருக்கு நன்றி. பாக்யா அண்ணனுக்கு தான் முதல் நன்றி. அவர் தான் என்னை மிரட்டி இப்படத்தில் கொண்டு வந்தார். எனக்குத் தயக்கம் இருந்தது, ஆனால் அவர் தான் ஊக்கம் தந்து, மிரட்டி, கூட்டி வந்தார். என் வளர்ச்சியில் மிகவும் அக்கறை மிக்கவர். ஒரு டீமாக இயக்குநர் ஜெயலட்சுமி மேடமுக்கு எல்லோரும் ஆதரவாக இருந்தனர். ஜெயலட்சுமி மேடம் அவருக்கு என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார். அவரே நடிச்சு காட்டி விடுவார். முழுக்க முழுக்க அன்பாக வேலை வாங்கினார். மிகவும் பவர்ஃபுல்லான லேடி. அவர் அன்புக்காக இந்தப்படம் வெற்றி பெற வேண்டும். டோனி சூப்பரான கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது சந்தோசம். சாண்டி இசை மிக நன்றாக வந்துள்ளது. அவருக்கு  தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் உள்ளது.  படம் மிக நன்றாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

படத்தின் இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ பேசியதாவது..

இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். என்னை மேடமிடம் அறிமுகப்படுத்திய பாக்யா அண்ணனுக்கு நன்றி. படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது…

பாக்யா அண்ணன் சினிமாவில் மிக முக்கியமான ஆள், நான் வேலையை விட்டு வந்தபோது, என்னைத் தாங்கி நிற்க வைத்தவர், அவர் தான். நான் ராம், கௌதம் எல்லோரும் ரூம் மேட், இப்போது எல்லோரும் இயக்குநராக உள்ளார்கள் மகிழ்ச்சி. டாணாக்காரன் படத்தில் லிங்கேஷ் எனக்காகத் துணை நின்றார். டாணாக்காரன் படத்தில் வேலை பார்த்த எல்லோரும் இணைந்து இப்படம் எடுத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில், பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, இது அதிகரிக்க வேண்டும் ஆண்களுக்கு நிகராக பெண் இயக்குனர்களும் வரவேண்டும். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள பெண் இயக்குநர் ஜெயலட்சுமி மேடமிற்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் சூர்யா சேவியர் பேசியதாவது…

பல்கலைக்கழகங்களில், அரசியல் மேடைகளில் உரையாற்றியுள்ளேன், ஆனால் சினிமா மேடை இது தான் முதல் முறை. இங்கு என்னை அறிமுகப்படுத்திய பாக்யாவிற்கு என் நன்றிகள். மனிதர் அனைவருக்கும் பிடித்தது கடலும்,  மலையும், கண்கொள்ளாமல் அதையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்தப்படத்தின் பாடல்களும் கடலை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. செத்துப்போன காதலை எப்போதும் பாடிக்கொண்டிருக்கும் அலைகள் இருப்பதால், அதனை தரங்கம்பாடி என்பார்கள். படக்குழு அங்கு படமெடுத்துள்ளார்கள். அங்கு ஒரு காதல்கதையைச் சொல்ல முயன்றுள்ள படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். கன்னிகா தானமும், திருமணமும் நாம் ஏற்படுத்திக் கொண்டது, அது வழக்கே கிடையாது. காதல் மட்டுமே ஆதியிலிருந்து நமக்குள் சொந்தமாக இருந்தது என்கிறார் பெரியார். பெரியார் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்பார்கள், ஆனால் அவர் அறிவுக்கு முரணாக பேசியதே இல்லை. இந்தப்பெண் இயக்குநரைப் பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது. எல்லோரும் இணைந்து ஒரு விதையை விதைத்துள்ளார்கள். அந்த வகையில் இப்படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். ஒரு காலத்தில் பெண்கள் நடிக்கவே கூடாது எனச் சொல்லும் காலகட்டம் இருந்தது. ஆண்களுக்குத் தான் சேலை கட்டி நடிக்க வைத்தார்கள்.  கேபி ஜானகியம்மாள் எனும் பெண் தான் முதலில் நடிக்க வந்தவர். இப்படியான வரலாற்றில் பெண்கள் சினிமாவில் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள எடுத்துள்ள முயற்சி இருக்கிறதல்லவா ! அது அற்புதமானது. அந்த வகையில் ஒரு விசயத்தை எடுத்து, அதைச் சாதித்து காட்டியுள்ள இயக்குநர் ஜெயலட்சுமிக்கு என் வாழ்த்துக்கள்.  மரணத்தைப் பொய்யாக்க காதலியுங்கள் என்றான் பாரதி. காதலை காட்சிப்படுத்தியுள்ள இந்தப் படைப்பாளிகள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

படத்தை தயாரித்து, இயக்கியுள்ள  ஜெயலட்சுமி பேசியதாவது…

இறைவனுக்கு நன்றி. ஒரு தாய் என்ன செய்வாள் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகையில், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அனுப்புவாள். ஆனால் என் மூன்று குழந்தைகள் தான் என்னை அத்தனை அக்கறையோடு படப்பிடிப்புக்கு அனுப்புவார்கள். அவர்களுக்கு என் நன்றி. என்னை இப்படத்தில் முழுமையாக ஆதரித்த தமிழ் அவர்களுக்கு நன்றி. லிங்கேஷ் அத்தனை அர்ப்பணிப்போடு உழைப்பார், நான் லேசாக முகம் வாடினாலும் மேடம் பார்த்துக்கொள்ளலாம் என ஆதரவு தருவார். இசையமைப்பாளர் சாண்டி, ஒளிப்பதிவாளர் டோனி இருவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி, இப்படம் முழுமையாக உழைத்த காட்பாடி ராஜன்,பாக்யா அவர்களுக்கு நன்றி. எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இப்படத்தில் அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ இசையமைத்துள்ளார். மூடர்கூடம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டோனி ஜான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் படத்தின் மூலம் பிரபலமான கோபி கிருஷ்ணா இந்த  படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். பாடல்கள்களை கபிலன், சந்துரு, இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு நிர்வாகம்- பாக்கியராஜ், தயாரிப்பு – Sky wanders Entertainment

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், விரைவில் திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.